ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும்.. இளைஞர் கைதுக்கு டிடிவி கண்டனம்

post-img
சென்னை: விருகம்பாக்கத்தில் முதல்வர் முக ஸ்டாலினின் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் காலணியை வீசும் வீடியோவை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் அனுமதியில்லா இடத்தில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பு வீசிய காட்சிகளை பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி பொதுமக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய முதலமைச்சருக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, டிடிவி தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சரின் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பை வீசி மண்ணை தூற்றிய வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும், இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனையையும் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, சமூக வலைத்தளங்களில் அரசையும், முதல்வரையும் விமர்சிப்போரை தேடித் தேடி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பால் விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி பொதுமக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி, தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட போராடும் சூழலை உருவாக்கிய முதலமைச்சர் மீது மண்ணை தூற்றி வீசாமல் மாலை அணிவித்து பாராட்டு விழாவா நடத்த முடியும் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, சம்பந்தப்பட்ட மூதாட்டி மீதான புகாரில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post