பாதியில் நிற்கும் வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டிடத்தில் சூப்பர் மாற்றம்.. வருகிறது காய்கறி சந்தை

post-img
கோவை: கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த கட்டிடத்தில் மொத்த காய்கறி மற்றும் பழ மார்க்கெட் அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை வெள்ளலூர் பகுதியில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் பணிகள் சற்று விறுவிறுப்பாக நடைபெற்றாலும் நாளடைவில் பணிகள் தொய்வடைந்தன. 40 சதவிகித பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாறியவுடன் அந்தப் பணிகள் முழுமையாக முடங்கின. திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு பேருந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. திமுக மேலிடத்துக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிமுக மற்றும் பாஜக புகார் தெரிவித்தன. இது சர்ச்சையான நிலையில், "பேருந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற எந்த முடிவும் எடுக்கவில்லை." என்று அரசுத்தரப்பில் விளக்கப்பட்டது. இருப்பினும் பேருந்து நிலையம் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி தரப்பில், "அந்தப் பகுதி பேருந்து நிலையத்துக்கு உகந்தது இல்லை என்று ஒரு பொதுத்துறை நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவையில் அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலையில் தான் 80 சதவீதம் பேருந்துகள் வந்து செல்கின்றன. அதனால் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைந்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தவிர இது குறுகிய சாலை என்பதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும். என்று அந்த ஆய்வில் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார்கள்." என்று கூறியிருந்தனர். இந்நிலையில், வெள்ளலூர் பகுதியில் பாதியில் நிற்கும் பேருந்து நிலைய கட்டிடத்தை மொத்த காய்கறி, பழ அங்காடி மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம், சரக்கு வாகனங்களுக்கான அலுவலக கட்டிடமாக மாற்றியமைப்பதற்கு கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "கோவை மாநகரைப் பொறுத்தவரை மேட்டுப்பாளையம் சாலை எம்ஜிஆர் மார்க்கெட், டவுன்ஹால் டிகே மார்க்கெட், உக்கடம் ராமர் கோயில் மார்க்கெட் ஆகிய 3 மார்க்கெட்கள் உள்ளன. இவை மூன்றுமே மாநகரின் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள பகுதி என்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது- இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவாக, வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியான இடத்தில் மார்க்கெட் அமைக்க வேண்டும்." என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதேநேரத்தில் பேருந்து நிலையத்தை மார்க்கெட்டாக மாற்றுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. "வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைந்தால் கோவையின் தெற்கு பகுதி முழுவதுமே முன்னேற்றம் இருக்கும். எனவே அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்." என்று அதிமுகவினரும், வெள்ளலூர் பகுதி மக்களும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post