நேரு குறித்து கீழ்தரமான அவதூறு.. ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கோரி விளக்கம்

post-img
சென்னை: நாட்டின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவஹர்லால் நேரு தொடர்பாக மிக மோசமான முறையில் அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்ததாக ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்நிலையில் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். STANDUP COMEDY செய்துவரும் பரத் பாலாஜி என்ற இளைஞர், நகைச்சுவை எனும் பெயரில் இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு குறித்தும், இந்திய சுதந்திர போராட்டம் குறித்தும் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் அவதூறான கருத்துகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். மேலும் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் பரத் பாலாஜியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலிறுத்தினார். செல்வப்பெருந்தகை வெளியிட்ட பதிவில், “ சமூக ஊடகங்களில் 'ஸ்டாண்ட் அப் காமெடி” என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை மிக மிக இழிவாக கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து, நவஇந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவரும், உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பட்ட பண்டித நேரு அவர்களை இத்தகைய முறையில் இழிவாக பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பண்டித நேரு அவர்களை தரம் தாழ்ந்த நரகல் நடையில் இழிவாக பேசிய பரத் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் மகத்தான மனிதராக கருதப்பட்ட பண்டித நேரு அவர்களை பழித்து பேசியவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அவதூறு பேச்சுக்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் மனதை புண்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இதுபோன்ற நாகரீகமற்ற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்த சைபர் கிரைம் பிரிவினருக்கு இருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். இதனிடையே பரத் பாலாஜியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் " நான் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ, பலரது உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதை உணர்ந்துள்ளேன்... அந்த வீடியோவை உடனடியாக நீக்கிவிட்டேன்.. பண்டிதர் ஜவஹர்லால் நேரு குறித்து நான் மிகவும் மதிப்பும் மரியாதை வைத்துள்ளேன். நான் இப்படி பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. இனி வரும் காலத்தில் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post