வள்ளுவரா? விவேகானந்தரா? கன்னியாகுமரியில் நடந்த போராட்டம் பற்றி தெரியுமா?

post-img
குமரி: தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலை எளிதாக அங்கே அமைக்கப்பட்டுவிடவில்லை என்பதும் அதற்குப் பின்னால் பெரிய போராட்டமே இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பொதுமக்கள் செல்வதற்காகக் கண்ணாடி பாலத்தைத் திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தப் பாலத்திற்காக முதல் முயற்சி அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் எடுக்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். உடனே திமுக உடன்பிறப்புகள் விவேகானந்தர் பாறைதான் இந்தியாவின் கடைசி பகுதியின் அடையாளமாக இருந்தது. அதை மாற்றி அங்கே வள்ளுவர் சிலையை அமைத்தவர் மு.கருணாநிதிதான் என்ற ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றனர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வந்த விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள பாறைக்கு நீந்திச் சென்று தியானம் செய்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அவர் தியானம் செய்த பாறை என்பதால் அங்கே ஒரு மண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. கடந்த ஜனவரியில் 1962 விவேகானந்தர் நூற்றாண்டு விழா நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட காலத்தில்தான் இந்தக் குமரி முனையில் ஒரு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அதற்காகக் காங்கிரஸ் ஆட்சியில் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. ராமகிருஷ்ண மடம் அதற்காக பணிகளில் இறங்கியபோது உள்ளூரிலிருந்த கத்தோலிக்க மீனவர்கள் அதனை எதிர்த்தனர் என்பது வரலாறு. விவேகானந்தருக்குப் பதிலாக அங்கே சிலுவையை அந்தப் பகுதி மீனவர்கள் வைத்த சம்பவமும் நடந்தது. பின் அங்கே சட்டவிரோதமாகச் சிலுவையை வைத்ததாகக் கூறி அரசு அதை அகற்றியது. இந்தச் சர்ச்சை பற்றி ஃபேஸ்புக்கில் குமரிக் கிழவனார் என்பவர் எழுதிய பதிவை வைத்து பலரும் விவாதித்து வருகின்றனர். குமரி கிறிஸ்துவர்கள் எதிர்ப்பைக் கண்டு மங்களூரில் இருந்து கரசேவகர்கள் சிலர் குமரிக்கு வந்து குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது என்று அவர் எழுதி இருக்கிறார். அதை விசாரிக்க கோல்வால்கர் அவரது ஏக்நாத் ரணதேவை அனுப்பி கள ஆய்வு நடத்த உத்தரவிட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்தத் தகராறு வரும் போதுதான் தமிழ் அடையாளமான வள்ளுவர் சிலைக்கும் அங்கே இடம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திற்குப் பின் திமுக குமரியில் வள்ளுவர் சிலை நிறுவுவதை ஒரு கொள்கையாகக் கையில் எடுத்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கிய போது இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. அப்போது தமிழக அரசு மார்ச், 21,1979 அன்று இந்தப் பாறையை வருவாய்த்துறை அதிகாரத்திற்குள் கொண்டுவந்தது. ஏப்ரல் மாதம் குமரி அனந்தபுரம் ரயில்வே லைன் தொடக்கவிழாவுக்கு வரவிருந்த அன்றைய பிரதமரை வைத்து அடிக்கல் நாட்டியது. நாற்பது அடி பீடத்தில் முப்பதடி உயரச் சிலை அமைப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது என்கிறார் தனது குமரிக் கிழவனார். ஆனால், 1980 ஆம் ஆண்டுக்குப் பின் மாநிலத்தில் ஆட்சியின் நிலைத்தன்மை இல்லாததால் இழுபறி நீடித்தது. வள்ளுவர் சிலை கனவு நிஜமாகவில்லை. அதன்பின்னர் தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதற்கான பணிகள் 1999இல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 2000 ஆண்டில் வள்ளுவர் வான் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றார். ஆனால், அப்போதே வள்ளுவர் பாறையையும் விவேகானந்தர் பாறையையும் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்தக் கனவு 25 ஆண்டுகள் கழித்து தற்போது நிஜமாகி உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post