தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணம் - காரணம் என்ன?

post-img
தமிழகத்தில் 11 ஆண்டுகளாகியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாததுடன், அதனை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்னும் 2 மாதங்களில் இதற்குத் தீர்வு காணப்படுமென்று ஆளும்கட்சி தொழிற்சங்கம் கூறுகிறது. ஆனால் அரசு தரப்பு இப்போது வரையிலும் இதுபற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தமிழக அரசின் போக்குவரத்துத்துறை புள்ளி விவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் (2023-24) அதிகமான ஆட்டோ ரிக்ஷாக்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் இப்போது செயல்பாட்டில் இல்லை. இதற்கு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அரசு உயர்த்தி நிர்ணயம் செய்யாததே காரணமென்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி பிபிசி தமிழிடம், ''ஆட்டோக்களின் உரிமையாளர்கள், அவற்றை வாடகைக்கு இயக்குபவர்கள் என தமிழகத்தில் 4 லட்சம் குடும்பங்கள் ஆட்டோ தொழிலை நம்பியுள்ளன.'' ''ஆனால் இந்தத் தொழில் பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து வருகிறது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயித்து, அதற்காக ஒரு செயலியை உருவாக்கினால் இந்தத் தொழிலைக் காப்பாற்ற முடியும்.'' என்றார். தமிழகத்தில் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டுமென்பதை முதல் கோரிக்கையாக வைத்து, சென்னை மற்றும் கோவையில் ஆட்டோ தொழிற்சங்கங்கள் சில வாரங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தின. இந்த அமைப்புகளின் மற்றொரு பிரதான கோரிக்கை, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டுமென்பதாகவுள்ளது. 2013-ஆம் ஆண்டில், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி, இப்போதுள்ள விலைவாசிக்கு ஆட்டோக்களை இயக்க முடியாது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. தமிழக அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில், கடந்த 2013 ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி (எண்:611), சென்னை பெருநகரத்தில் முதல் 1.8 கி.மீ. துாரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ. துாரத்துக்கும் 12 ரூபாய்; காத்திருப்புக்கு ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50, இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை இதில் 50 சதவீதம் அதிகம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், இந்த அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. மீட்டருக்கு மேல் அதிகக் கட்டணம் கேட்கும் ஆட்டோக்கள் மீது அனுமதிச்சீட்டு (Permit) ரத்து, வாகனம் பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின் சென்னை பெருநகரத்தில் உள்ள ஆட்டோக்களுக்கு அரசால் மீட்டர் முழுமையாக வழங்கப்படவில்லை; அந்த மீட்டர் கட்டணமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்காக எந்த ஆட்டோ மீதும் நடவடிக்கை எடுக்கவுமில்லை; சென்னைக்கு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் மற்ற மாவட்டங்களுக்கு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படவுமில்லை என்று நுகர்வோர் அமைப்பினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டில், ஆட்டோ கட்டணத்தை மறு வரையறை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு, புதிய கட்டணப் பட்டியலை போக்குவரத்து ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று பல்வேறு தொழிற்சங்கங்களும் இணைந்து போராடி உள்ளன. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி, ''மீட்டர் கட்டணத்தை முதல் 1.8 கி.மீ. துாரத்துக்கு 50 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ. துாரத்துக்கு 25 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். முத்தரப்பு கமிட்டி அமைத்து கட்டணத்தை நிர்ணயம் செய்யுமாறு, தமிழக அரசுக்கு இரு முறை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அரசு மெத்தனமாகவுள்ளது. எப்போது கேட்டாலும் 2 மாதங்கள் ஆகும், அமைச்சர் டேபிளில் இருக்கிறது, முதல்வர் டேபிளில் இருக்கிறது என்று தட்டிக்கழிக்கின்றனர்.'' என்றார். ஆனால் இந்த போராட்டத்தை விமர்சித்துள்ள அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம் (ஏடிபி), திமுக கூட்டணிக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு பெயரளவுக்கு போராட்டத்தை நடத்துவதாக குற்றம்சாட்டுகிறது. பைக் டாக்ஸி தடை, ஆட்டோ மீட்டர் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாக போராடப்போவதாகவும் அறிவித்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அண்ணா தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் கமலக்கண்ணன், ''வரும் 27 ஆம் தேதி, ஏடிபி, ஐஎன்டியுசி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் இணைந்து, சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் என்று போராட்டம் தொடரும்.'' என்றார். சென்னைக்கு ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பதைப் போலவே, மாவட்ட வாரியாக நிர்ணயம் செய்ய வேண்டுமென்பது மற்ற பகுதிகளில் உள்ள ஆட்டோ தொழிற்சங்கங்களின் கோரிக்கையாகவுள்ளது. ''தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக மீட்டர் கட்டணத்தை நிர்ணயிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அந்தந்த மாவட்டத்தின் விலைவாசி, பொருளாதாரச் சூழலை வைத்து மாவட்ட கலெக்டர், ஆட்டோ தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு இவற்றை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.'' என்கிறார் கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தலைவர் செல்வம். ஆனால் தமிழக அரசு ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்தாலும் அதன்படி கட்டணம் வசூலிக்கப்படுவது சந்தேகமே என்று நுகர்வோர் அமைப்பினர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன், ''இப்போது மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று கேட்கும் ஆட்டோ தொழிற்சங்கங்கள், 2013-ஆம் ஆண்டில் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி ஒரு நாளாவது ஆட்டோவை இயக்கியிருக்கிறார்களா. தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை இயக்காமலிருப்பதற்கு அரசும் அதிகாரிகளும்தான் காரணம். அரசியல் மற்றும் போராட்டங்களுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறுகின்றனர்.'' என்றார். அண்டை மாநிலங்களில் மிக எளிதாக நடைமுறைப்படுத்தப்படும் ஆட்டோ மீட்டர் கட்டண முறையை, இங்கே மட்டும் அமல்படுத்த முடியவில்லை என்பது அரசு இயந்திரங்களின் தோல்வியைத்தான் காண்பிக்கிறது என்கிறார் சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற நுகர்வோர் அமைப்பின் தலைவர் ஜெயராமன். தமிழகத்தின் கோவைக்கு தொழில் நிமித்தமாக அடிக்கடி வந்து செல்லும் கொச்சியைச் சேர்ந்த ஜோஸ், ''கேரளாவில் 100 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போகும் துாரத்துக்கு கோவையில் 300 ரூபாய் கேட்கிறார்கள். கொஞ்சம் குறைத்துக் கேட்டாலும் வருவதில்லை. அதற்கு செயலிகளில் இயங்கும் கால் டாக்சிகளின் கட்டணமும் சேவையும் எவ்வளவோ பரவாயில்லை.'' என்றார். கேரளாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை கேரள அரசு உயர்த்தியது. அதன்படி, முதல் 1.5 கி.மீ.துாரத்துக்கு 30 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கி.மீ.தூரத்துக்கும் 15 ரூபாய் வீதமும் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 15 நிமிட காத்திருப்புக்கும் கூடுதலாக 10 ரூபாய் என்றும் கேரள அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. கர்நாடகாவில் 2013 க்குப் பின் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தி நிர்ணயம் செய்தது. அதன்படி முதல் 2 கி.மீ.துாரத்துக்கு 30 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ. துாரத்துக்கும் 15 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டணத்தை முதல் 2 கி.மீ.துாரத்துக்கு 40 ரூபாய், ஒவ்வொரு கி.மீ.துாரத்துக்கும் 20 ரூபாய் என்று உயர்த்த வேண்டுமென்று ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் (ARDU) கோரிக்கை விடுத்து வருகிறது. அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல, பெங்களூருவில் துவக்கப்பட்ட ஆட்டோக்களுக்கான 'நம்ம யாத்ரி' என்ற மொபைல் செயலி, மிகப்பெரிய வெற்றியை எட்டியுள்ளது. 2024 டிசம்பர் 19 நிலவரப்படி, இந்த செயலியில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 752 ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர். பெங்களூருவில் கல்லுாரியில் படித்து வரும் தமிழக மாணவர் விதேஷ், ''அந்த செயலியில் நாம் போக வேண்டிய இடத்துக்கு குறைந்தபட்சம், அதிகபட்சம் என இரு தொகைகள் காட்டும். அதற்குள் ஒரு தொகையை அந்த ஓட்டுநர் நிர்ணயம் செய்வார். அதற்கு மேல் எப்போதும் கேட்க மாட்டார்கள். அது நியாயமான கட்டணமாகத்தான் இருக்கிறது. மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.'' என்றார். பெங்களூருவைத் தொடர்ந்து, மைசூரு, தும்கூர், கல்பர்கி ஆகிய கர்நாடகா மாநில நகரங்களைக் கடந்து சென்னை, ஹைதராபாத் என்று வெளிமாநிலங்களிலும் இந்த செயலி கால் பதிக்கத் துவங்கியுள்ளது. இப்படியொரு செயலியைத்தான் தமிழக அரசே உருவாக்க வேண்டுமென்று கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்துவதாகச் சொல்கிறார் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் சிவாஜி. ஆனால் இதுபோன்ற செயலி இல்லாமலே, கோவையில் பல்வேறு பெயர்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் ஒன்று சேர்ந்து குழுக்களாகச் செயல்படுகின்றனர். பொதுவான ஒரு மையத்தை ஏற்படுத்தி, தொலைபேசி எண்ணைக் கொடுத்து, வாட்ஸ்ஆப் உதவியுடன் செயல்படும் இவர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரு மீட்டர் தொகையை நிர்ணயித்து இயக்கி வருகின்றனர். உதாரணமாக, குறைந்தபட்சம் 2 கி.மீ.துாரத்துக்கு 60 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ. துாரத்துக்கும் 16 ரூபாய் என்றும், இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை இந்த கட்டணத்தை முறையே 70 ரூபாய் மற்றும் 20 ரூபாய் என்ற அளவில் நிர்ணயித்துள்ளனர் இத்தகைய மீட்டர் ஆட்டோ குழுவில் இணைந்து செயல்பட்டு வரும் சந்துரு பிபிசி தமிழிடம், ''நாங்கள் 100 ஆட்டோக்கள் இணைந்து ஒரு குழுவாக செயல்படுகிறோம். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் சில குழுக்கள் செயல்படுகின்றன. நாங்கள் எந்த ஆட்டோ ஸ்டாண்டிலும் வண்டியை நிறுத்தமாட்டோம். தகவல் வரவர போய்க் கொண்டேயிருப்போம். இத்துடன் ஓலா, ஊபர் போன்ற செயலிகளிலும் எங்களை இணைத்துக் கொண்டிருப்பதால் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறோம்.'' என்றார். தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டு வரும் அசாத்திய தாமதம் குறித்து, தமிழக போக்குவரத்துத்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் கேட்டபோது, ''அந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகம் கையாள்கிறது.'' என்றார். உள்துறை தமிழக முதல்வரின் கையில் இருப்பதால், முதல்வர் அலுவலகம், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு பதில் கோரி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த பதிலும் வரவில்லை. அரசின் பதில் வந்தால் அது இக்கட்டுரையில் இணைக்கப்படும். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், ''ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றுதான் எங்களுடைய தொழிற்சங்கமும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆட்டோவுக்கு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிப்பார்கள் என்பதால் அரசு தரப்பில் யோசித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.'' என்றார். ''ஆனால் பெட்ரோல் விலை, உதிரி பாகங்கள் விலை மற்றும் விலைவாசியைக் கணக்கிட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டண உயர்வைக் கோருவது நியாயமான கோரிக்கைதான். இதுபற்றி முதல்வர், அமைச்சர் என எல்லோரிடமும் பேசி வருகிறோம். இன்னும் 2 மாதங்களில் இதற்கு தீர்வு காணப்படும்.'' என்றும் சண்முகம் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post