ஆறரை மணிநேரத்துக்கு பின் விடுதலை.. குஷ்புவை பார்க்க பாஜகவினர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

post-img
மதுரை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி செல்ல முயன்ற குஷ்புவை இன்று போலீசார் கைது செய்த நிலையில் ஆறரை மணிநேரம் கழித்து விடுவித்தனர். அப்போது குஷ்புவை காண பாஜகவினர் குவிந்ததால் சிம்மக்கல்லில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவியை மிரட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தான் ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த பாலியல் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். எப்ஐஆர் விவகாரங்கள் வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் போலீசார் எழுதியுள்ளதாக விமர்சனம் செய்தார். மாணவிக்கு நேர்ந்த அநீதியை கண்டித்து அவர் தன்னை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் நீதி பேரணி தொடங்கும் என்று அவர் அறிவித்தார். மதுரையில் இருந்து சென்னை வரை இந்த நீதி பேரணி செல்லும். இறுதியில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் கோரிக்கை மனு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி மதுரை சிம்மக்கலில் உள்ள செல்லாத்தமன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி சிலை முன்பு இன்று காலை திரண்ட பாஜகவினர், தீச்சட்டி ஏந்தி சாமியாடி பின்னர் பேரணியை தொடங்க முயன்றனர். பேரணிக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமை தாங்கியிருந்தார். ஆனால், பேரணிக்கு காவல்துறை அனுமதியை மறுத்திருந்த நிலையில் அவர்களை கைது செய்தனர். அதன்பிறகு குஷ்பு உள்பட பாஜக நிர்வாகிகள் அனைவரும் மதுரை சிம்மக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த மண்டபம் பக்கத்தில் ஆட்டு கொட்டகை உள்ள நிலையில் அங்கு ஆடுகள் கட்டி வைக்கப்பட்டது. இதனால் பாஜக மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேறு மண்டபத்தில் அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர். ஆனால் போலீசார் மண்டபத்தை மாற்றவில்லை. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு குஷ்பு உள்பட கைதான 250 பேரும் விடுவிக்கப்பட்டனர். காலை 11.30 மணிக்கு கைதான அவர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இந்த வேளையில் குஷ்புவை பார்க்க பாஜகவினர் ஏராளமானவர்கள் மண்டபம் முன்பு குவிந்தனர். இதனால் சிம்மக்கல்லில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் குஷ்பு மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு குஷ்பு, ‛‛எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் மாணவிக்கு நீதி கேட்கிறோம்'' என்று கூறி சென்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post