72 வயதாகிறது.. பதவி வேண்டாம்.. உதறி தள்ளும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

post-img
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலக விரும்புவதாக கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்றும் சிபிஎம் 24-வது மாநில மாநாட்டில், தமக்கு 72 வயதாக இருப்பதால் தம்மை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழுப்புரத்தில் சிபிஎம் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கிறதா? இந்த ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்படுகிற அவலநிலை இருக்கிறது என கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை ஆளும் திமுக அரசு விமர்சித்து வரும் நிலையில் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிபிஎம்-ன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாநாட்டில் இன்று பேசிய கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது. கட்சி அமைபு விதிகளின்படி 72 வயதாகிவிட்டால் எந்த பொறுப்புகளும் வகிக்க முடியாது. ஆகையால் தம்மை கட்சி விதிகளின் கீழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில செயலாளராக 6 ஆண்டுகால பயணம் 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மாநாட்டில் சிபிஎம் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970களில் இருந்தே இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து கே.பாலகிருஷ்ணனின் இடதுசாரி அரசியல் பயணம் தொடங்கியது. 1973-ம் ஆண்டு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவராக இருந்தார். 2011-ம் ஆண்டு சிதம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வென்றார். கடந்த 6 ஆண்டுகளாக சிபிஎம் மாநிலச் செயலாளராக பதவி வகித்த நிலையில் தற்போது 72 வயதாவதை முன்னிட்டு பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post