"தமிழகம் அமைதியாக இருக்காது!" யுஜிசியின் புதிய துணைவேந்தர் நியமன விதிகள்.. முதல்வர் ஸ்டாலின் தாக்கு

post-img
சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக யுஜிசி அமைப்பு புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. இந்த விதிகளின் கீழ் ஆளுநரே தேர்தல் குழுவை முடிவு செய்வார் எனக் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த புதிய விதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இது கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் என்றும் இதை எதிர்த்து சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். நாட்டின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. புதிய விதிகளின் கீழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் யுஜியி விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்த புதிய விதிகளின்படி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார். அதாவது இந்த தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யூஜிசி பரிந்துரைக்கும் நபர் இருப்பார் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.. மற்றொரு உறுப்பினராகப் பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார். இதன் மூலம் மாநில அரசு பரிந்துரைக்கும் நபர் குழுவில் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. யுஜிசியின் புதிய விதிகள் தொடர்பான தகவல் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வி என்பது இப்போது பொதுப் பட்டியலில் இருக்கும் சூழலில், யுஜிசி இதுபோல விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "துணை வேந்தர்கள் நியமனங்களில் ஆளுநர்களுக்குப் பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்களும் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது என யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகள் கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். அதிகாரத்தைத் தன்வசம் குவிக்கவும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்கவும் இந்த எதேச்சாதிகார நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது. கல்வி என்பது பாஜக அரசின் ஆணையின்படி செயல்படும் ஆளுநர்கள் வசம் இல்லாமல்.. மக்கலால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வசம் இருக்க வேண்டும். சிறந்த உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டு நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. கல்வி என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொது பட்டியலின் உள்ளது. எனவே யுஜிசி இந்த அறிவிப்பை ஒருதலைபட்சமாக வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது, தமிழகம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடும்" என்று காட்டமான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். முன்னதாக சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யத் தேர்வுக் குழு அமைத்து ஆளுநர் ஆர் என் ரவி உத்தரவிட்டார். அதில் முதல்முறையாக யுஜிசி உறுப்பினர்கள் இடம்பெற்று இருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post