சிறுமியை சீரழித்த நபருக்கு உதவிய அதிமுக வட்ட செயலாளர் சுதாகர்.. கட்சியை விட்டு தூக்கிய எடப்பாடி!

post-img
சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் ப.சுதாகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக கட்டப் பஞ்சாயத்து செய்ததாக கைது செய்யப்பட்ட சுதாகர், அதிமுக வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். சென்னையை அதிர வைத்த சம்பவம் இது தொடர்பாக சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பகல் மற்றும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்ததுடன், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் பெயரை நீக்கும்படி போலீசார் அறிவுயறுத்தி உள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர், அண்ணாநகர் துணை கமிஷனர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு காவல் நிலையத்தில் நேர்ந்த கொடுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரின் முன்பு வைத்து புகார் அளித்த சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு ஆதரவாக அண்ணாநகரைச் சேர்ந்த 103வது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் நேரடியாக மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்த பெற்றோரை மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக நிர்வாகி சுதாகர், குற்றவாளியை காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றதோடு, சிறுமியிடம் நண்பராக பழகிய ஒரு 14 வயது சிறுவனை போலியாக பலாத்கார வழக்கில் கைது செய்யும்படி காவல் ஆய்வாளரிடம் கூறியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, புகாரில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்க அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ராஜி வலியுறுத்தி, போலியான குற்றவாளியை கைது செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் ராஜி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கி உள்ளார். பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதோடு, போலியான குற்றவாளியை கைது செய்யவும் வைத்த அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற அதிமுக நிர்வாகி சுதாகர் கட்டப் பஞ்சாயத்து செய்ததாகவும், சிறுமியின் குடும்பத்திற்கு பணம் பெற்றுத் தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் அடைக்கலமும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் ப.சுதாகர், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்ட்டுள்ளார். தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட 103-வது வட்டச் செயலாளர் சுதாகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post