காலி ஃப்ளவருக்குள் ரூ.6 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. சென்னை ஏர்ப்போர்ட்டை அலற வைத்த வடமாநில இளம்பெண்

post-img
சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காளான், காலி ஃப்ளவர், உடைகளில் மறைத்து வைத்து கஞ்சாவை கொண்டு வந்த வடமாநில பெண் சிக்கியுள்ளார். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் பயணிகள் விமானங்களில், அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் இன்று சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகத்துக்கு உரிய வகையில் இருந்த வடமாநில பெண் பயணி ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உடைகள், காளான், காலி ஃப்ளவர் ஆகியவற்றுக்குள் சுமார் 6 கிலோ பதப்படுத்தப்பட்ட, உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா முழுவதையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கஞ்சா கடத்தி வந்த அந்த வடமாநில இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம், யாரிடம் கொடுப்பதற்காக கஞ்சாவை கொண்டு வந்தார், வேறு யாரும் உடன் வந்தார்களா? என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்த முக்கிய நபர்கள் சென்னையில் எங்கு இருக்கிறார்கள்? எந்த இடத்தில் வைத்து இந்த கஞ்சாவை பெற்றுக் கொள்வார்கள்? இதற்கு முன்பும் குருவியாக அந்தப் பெண் வேலை செய்துள்ளாரா என விசாரணை நடத்தி, அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், இதுபோல் உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி சென்னையை சேர்ந்த பெண் பயணி ஒருவர் 2.8 ஒரு கிலோ மதிப்புடைய ஹைட்ரோ போனிக் கஞ்சா கடத்தி வந்து கைதானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர் ரக பதப்படுத்த ப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி, சென்னை பயணி ரூ.3.6 கோடி மதிப்புடைய 3.6 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று 6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவுடன் வடமாநில பெண் சிக்கி உள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post