நள்ளிரவில் இறங்கிய இஸ்ரேல் படை.. ஈரான் ஏவுகணை ஆலை மொத்தமாக அழிப்பு.. சிரியாவில் அதிரடி ஆப்ரேஷன்

post-img
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டை சுற்றிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியா நாட்டிற்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய ஒரு சீக்ரெட் ஆப்ரேஷன் குறித்த விவரங்களை அந்நாட்டு ராணுவமே வெளியிட்டுள்ளது. எல்லையில் இருந்து சுமார் 200 கிமீ உள்ளே சிரியாவில் இருந்த ஈரானுக்குச் சொந்தமான ஏவுகணை ஆலையை இஸ்ரேல் மொத்தமாகத் தாக்கி அழித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே மோதல் நிலவி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, இஸ்ரேல் எனச் சுற்றிலும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அதேநேரம் சமீப காலங்களாகவே இஸ்ரேல் பல அதிரடி ஆப்ரேஷன்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளில் பல தலைவர்களைக் குறிவைத்துக் கொன்றுள்ளது. இதற்கிடையே சிரியா நாட்டிற்குள் நுழைந்து இஸ்ரேல் நடத்திய அதிரடி ஆப்ரேஷன் குறித்த தகவல்களை இஸ்ரேல் இப்போது பகிர்ந்துள்ளது. சிரியா நாட்டில் அமைந்திருந்த ஈரான் ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து இஸ்ரேல் இந்த ஆப்ரேஷனை கடந்த செப். மாதம் நடத்தியிருந்தது. அதன் தகவல்களைத் தான் இஸ்ரேல் இப்போது பகிர்ந்துள்ளது. ஆப்ரேஷன் மேனி வேஸ் என்று அழைக்கப்பட்ட இந்த ரெய்ட்டை இஸ்ரேலிய விமானப்படை நடத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மொத்தம் 120 இஸ்ரேல் வீரர்கள் சிரியாவில் உள்ளே சென்று ஈரானுக்கு சொந்தமான ஏவுகணை உற்பத்தி ஆலையைத் தாக்கி அழித்துள்ளனர். சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி இருந்த போதே இந்த ஆப்ரேஷனை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.. சிரியா நாட்டில் நிலத்திற்கு அடியில் அமைந்துள்ள இந்த ஏவுகணை உற்பத்தி ஆலையை வைத்துத் தான் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவின் ஆசாத் ஆட்சிக்கும் ஏவுகணைகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே ரிஸ்க் எடுத்து உள்ளே சென்று இதை மொத்தமாக இஸ்ரேல் அழித்துள்ளது. மேற்கே சிரியாவில் உள்ள சிஇஆர்எஸ் அல்லது எஸ்எஸ்ஆர்சி எனப்படும் ஆராய்ச்சி மையத்தில் இந்த ஏவுகணை ஆலை அமைந்துள்ளது. டீப் லேயர் என்று அழைக்கப்படும் இந்த ஆலை, இஸ்ரேலின் எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் சிரியாவின் மஸ்யாஃப் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு இந்த ஆலையில் இருந்து தான் ஆயுதங்கள் சென்று வந்ததாகவும் இதை யூனிட் 669 உடன் இணைந்து இஸ்ரேல் விமானப் படையின் ஷால்டாக் பிரிவினர் வெற்றிகரமாக அழித்தாக இஸ்ரேல் கூறியது. மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எந்தவொரு இஸ்ரேல் வீரரும் காயமடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இஸ்ரேலின் வடக்கு எல்லையில் தீவிரவாத அமைப்புகளுக்கு இங்கு இருந்து தான் ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டன. இங்குத் துல்லியமான ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகளை தயாரிக்கப்பட்டன. ஹிஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏவுகணைகள் இங்கிருந்தே சென்றுள்ளன. அதை இஸ்ரேல் வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது" என்று கூறப்பட்டுள்ளது. இங்கு 250-300 கிமீ தூரம் சென்று தாக்கும் M600F ஏவுகணைகளையும், 130 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் துல்லியமாகத் தாக்கும் M302 ஏவுகணைகளையும், 70 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் M220 ஏவுகணைகளையும், 40 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய M122 ராக்கெட்டுகளையும் ஈரான் தயாரித்து வந்துள்ளது. இவை அனைத்துமே ஹிஸ்புல்லா அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வந்த ஏவுகணை வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பயோ மற்றும் கெமிக்கல் ஆயுதங்கள் கூட உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்து பல ஆயுதங்கள், உளவுத்துறை ஆவணங்களையும் கூட இஸ்ரேல் தனது நாட்டிற்கு எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post