ஹெச்1பி தவிர, அமெரிக்காவில் வேலை அனுமதிக்கான இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு - இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

post-img
அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் தற்போது விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகு, அவர்கள் அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதியளிக்கின்றது. இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு வரும் சர்வதேச மாணவர்களிடையே மிகவும் பிரபலமானது. அத்திட்டத்தின் அதிகபட்ச பயனாளிகள் இந்தியர்களாக உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது, 'அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக்குவோம்' என்று டிரம்ப் முழங்கினார். விருப்ப நடைமுறைப் பயிற்சித் திட்டத்திற்கு எதிராக கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் அத்திட்டத்திற்க்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க தொழில்நுட்பத் தொழிலாளர்கள் (US Tech workers) போன்ற சமூக ஊடகத் தளங்கள் வலியுறுத்துகின்றன. அமெரிக்க தொழில்நுட்பத் தொழிலாளர்கள் என்பது வேலைவாய்ப்புக்கான விசா திட்டத்திற்கு எதிரான அமெரிக்கர்களின் தளமாகும். அமெரிக்க தொழில்நுட்பப் பணியாளர்கள் அமைப்பு தங்கள் சமூக ஊடகப் பதிவுகளில், விருப்ப நடைமுறைப் பயிற்சி என்பது ஹெச்1பி விசாவை விட மோசமானது, இது அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கிறது என்று பதிவிட்டுள்ளது. விருப்ப நடைமுறைப் பயிற்சியின் கீழ் பணிபுரியும் மாணவர்களுக்கு சம்பளத்தில் வழங்கப்பட்ட வரிவிலக்கு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கூற்றுப்படி, 2023-24 ஆம் ஆண்டில் 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி பயிலச் சென்றுள்ளனர். இந்த மாணவர்களில் 29.42 சதவீதம் பேர் அதாவது 97 ஆயிரத்து 556 பேர் விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்தைத் தேர்வு செய்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 10 லட்சம் மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா செல்கின்றனர். விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) என்பது சர்வதேச மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை குறித்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. எளிமையான மொழியில் கூற வேண்டுமென்றால், இத்திட்டம் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் (USCIS) படி, சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பின் போது அல்லது அதற்குப் பிறகு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதன் உதவியுடன், மாணவர்கள் ஒரு வருடம் அமெரிக்காவில் வேலை செய்யலாம். படிப்பிற்கான விசா உள்ள மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். விசா ஆலோசகர் கமன்தீப் சிங் கூறுகையில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து அமெரிக்காவிற்கு படிக்க வரும் மாணவர்களுக்கு எப்- 1 விசா வழங்கப்படுகிறது, இது படிப்பிற்கான விசா என்றும் அழைக்கப்படுகிறது என்றார். மேலும் பேசிய அவர், "அமெரிக்காவில், பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகள் கொண்டது. அதேசமயம் முதுகலைப் பட்டம் பெற இரண்டு ஆண்டுகள் மட்டுமே போதும். விருப்ப நடைமுறைப் பயிற்சித் திட்டம் இல்லை என்றால், மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் உடனடியாக தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட வேண்டும்." என்று கூறினார். இதுகுறித்த மேலும் விளக்கிய கமன்தீப், "படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் விருப்ப நடைமுறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பார்கள், இதில் ஒரு வருடம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்."என்று தெரிவித்தார். "விருப்ப நடைமுறை பயிற்சியின் போது, ஒரு மாணவர் தான் படித்த அதே துறையில் பணியாற்ற முடியும்" என்றும் கமன்தீப் சிங் குறிப்பிட்டார். இரண்டு வகையான விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டங்கள் உள்ளன . ஒன்று படிக்கும் போதே பதிவு செய்யும் முறை, மற்றொன்று படிப்பு முடிந்த பின் பதிவு செய்யும் முறை. படிக்கும் போதே ஒரு மாணவர் இத்திட்டத்தில் பயன் பெற்றால், அவர் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம். வகுப்புகள் இல்லாத பட்சத்தில், அவர் முழு நேரமும் வேலை செய்யலாம். மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகும், விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இது மற்றொரு முறை. இதன் மூலம் மாணவர்கள் படிப்பு விசா இல்லாமல் ஒரு வருடம் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய முடியும். இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்கள் வாரத்தில் 20 மணிநேரம் அல்லது முழு நேரமும் வேலை செய்யலாம். ஒரு மாணவர் ஸ்டெம் துறையில் அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றிருந்தால், அவருக்கு இந்த அனுமதி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம். அதாவது படிப்பை முடித்த பிறகு, மாணவர் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் வரை தங்கி வேலை செய்ய முடியும். ஆலோசகர் கமன்தீப் சிங் தனது மாணவர்களில் ஒருவரின் உதாரணத்தை அளித்து, "எங்கள் மாணவர்களில் ஒருவரான ராகேஷ் 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அவர் அறிவியலில் பட்டப்படிப்பு படிக்கிறார். அவர் படிக்கும் போதே விருப்ப நடைமுறை பயிற்சிப் பெற்றார்" என்று கூறுகிறார். மேலும் , "விருப்ப நடைமுறை பயிற்சியின் போது வேலை செய்வது, அனுபவ காலமாக கணக்கிடப்படுகிறது. இதன் உதவியுடன் ராகேஷ் எதிர்காலத்தில் வேலை பெறுவது எளிதாக இருக்கும்"எனவும் கூறுகின்றார். ராகேஷ் அறிவியல் படிப்பதால் மூன்று ஆண்டுகள் வரை விருப்ப நடைமுறை பயிற்சி பெற முடியும். டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த பிறகு, ஹர்மன்ப்ரீத் கவுர் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 'மிஸிஸிப்பி கல்லூரி' பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கிருந்து மனநல ஆலோசனை துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிபிசியிடம் பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், "மனநல ஆலோசனைத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, ஒரு வருடத்திற்கான விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். படிப்பு முடிந்ததும், எங்களுக்கு வேலை தேட 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது" என்றார். மேலும் பேசிய அவர், "படிப்பு முடிவதற்கு முன்பே நான் வேலை தேட ஆரம்பித்தேன். விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்தின் கீழ், எனக்கு ஒரு வருடம் வேலை செய்வதற்கான விசா கிடைத்தது, இந்த நேரத்தில் நான் ஒரு மருத்துவமனையில் பணி புரிந்தேன். அப்போது தான், படிப்பு விசா (எஃப்- 1), எஃப்- 1 விருப்ப நடைமுறை பயிற்சி விசாவாக (F-1 OPT visa) மாறியது " என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஹர்மன்ப்ரீத், "விருப்ப நடைமுறை பயிற்சியின் நன்மை என்னவென்றால், அமெரிக்காவில் நான் பெற்ற கல்வியை ஆண்டு முழுவதும் வேலை செய்யும் போது பயன்படுத்தினேன். இது எனக்கு நல்ல அனுபவத்தை அளித்தது" என்றார். ஒரு வருட கால விருப்பப் பயிற்சித் திட்டத்திற்குப் பிறகு ஒரு நிறுவனம் வேலை அளிக்கவில்லை என்றால், மாணவர்கள் பெரும்பாலும் மற்ற படிப்புகளில் சேர்க்கை பெறுவார்கள் அல்லது அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். விருப்பப் பயிற்சித் திட்டத்தில் உள்ள மாணவர்கள் ஹெச்- 1பி விசா பெறுவது மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார். மாணவர் வேறு ஏதாவது படிப்பில் சேரும்போது, அவருக்கு மீண்டும் படிப்பு விசா அதாவது எஃப்- 1 விசா கிடைக்கும் என்று ஹர்மன்ப்ரீத் தெரிவித்தார். கனடாவில் வசிக்கும் முகேஷும் இதேபோன்ற கருத்தைத் தான் தெரிவித்தார். வணிக பகுப்பாய்வுத் துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக 2017ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார் முகேஷ். இந்த துறை 'ஸ்டெம் ' இன் கீழ் வருகிறது, அதாவது, இந்த பாடத்திட்டத்திற்குப் பிறகு மாணவர் தனது படிப்பை முடித்த பிறகு மூன்று ஆண்டுகள் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார். முகேஷ் கூறுகிறார், "எனது முதுகலை பட்டப்படிப்பு 2019 இல் நிறைவடைந்தது, பின்னர் நான் 2023 வரை மூன்று ஆண்டுகள் விருப்ப நடைமுறை பயிற்சியின் கீழ் முழுநேரமாக வேலை செய்தேன். இந்த நேரத்தில், எனது நிறுவனம், எனக்கு ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தது. ஆனால் என் பெயர் வரவில்லை. அதற்காக நான் அமெரிக்காவை விட்டு கனடா செல்ல வேண்டியிருந்தது."என்றார். மேலும் "விருப்ப நடைமுறை பயிற்சி முடிந்ததும், நீங்கள் அமெரிக்காவில் வேலை செய்ய முடியாது, அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மீண்டும் ஒரு பல்கலைக் கழகத்தில் சேர வேண்டும், அல்லது வீடு திரும்ப வேண்டும்."என்றும் அவர் குறிப்பிட்டார். படிப்பு விசா காலாவதியான பிறகு இரண்டாண்டு முதுநிலைப் படிப்பில் சேரும் மாணவர்கள் இப்போது கவலையடைந்துள்ளனர். ஏனெனில் டிரம்ப் ஆட்சிக்கு வருவதால், அவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று முகேஷ் கூறுகிறார். ஜனவரி 20 ஆம் தேதி, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கிறார். அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து இந்தியாவில் உள்ள `ஏபிகல் இமிக்ரேஷன் நிபுணர்கள்' (Apical Immigration Expert) எனும் நிறுவனத்தின் இயக்குநர் மணீஷ் ஸ்ரீவஸ்தவா கவலை தெரிவிக்கின்றார். அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு, அமெரிக்க குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், டிரம்பின் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" எனும் கொள்கையின் தாக்கம் விரைவில் வெளிப்படும் என்று பிபிசியிடம் பேசிய மணீஷ் குறிப்பிட்டார். மணீஷ் மேலும் கூறும் போது, "தற்போது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விருப்பப் பயிற்சி நடைமுறை விசா கிடைத்தால், அது ஒரு வருடமாக குறைக்கப்படலாம். அதேசமயம், பொதுப் படிப்பை முடித்த பிறகு வழங்கப்படும் ஒரு வருட வேலை விசா ரத்து செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டார். டிரம்பின் வருகைக்குப் பிறகு, விசா நிராகரிப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும், முன்பை விட அதிகமான ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறுகிறார். விசா ஆலோசகர் கமன்தீப் சிங்கும் இதே கருத்தை தெரிவிக்கின்றார். "இந்தியாவில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் அமெரிக்காவில் குடியேற விரும்பியே செல்கிறார்கள், கல்வி என்பதை அதற்கான ஒரு வழியாகவே அவர்கள் பார்க்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். விருப்ப நடைமுறை பயிற்சியின் கீழ் பெறப்பட்ட வேலை விசாக்கள் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருக்கும் என்றும் ஸ்டெம் அல்லாத மற்ற படிப்புகளைச் கற்கச் செல்லும் மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் ஹெச்1பி விசா 1990ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது திறமையான ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த விசா மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது, ஆனால் அதன் காலம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஹெச்1பி விசாக்களின் எண்ணிக்கை 85 ஆயிரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 20 ஆயிரம் விசாக்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதுகலை அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்கள் வேலைகளை வழங்கும் போது மட்டுமே இந்த விசா கிடைக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஹெச்1பி விசா குறித்து இந்திய வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தற்போது இந்தியர்கள் அதிகபட்சமாக ஹெச்1பி விசாக்களை பெற்றுள்ளனர். டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் இருந்தே ஹெச்1பி விசாவை எதிர்த்து வருகிறார். ஆனால், சமீபத்தில் அவரும் ஹெச்1பி விசாவை ஆதரித்திருந்தார். டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் ஹெச்1பி விசா நிராகரிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அக்டோபர் 2017 மற்றும் செப்டம்பர் 2018-க்கு இடையில், இந்த விகிதம் 24 சதவீதத்தை எட்டியது. அதற்கு முந்தைய ஒபாமா ஆட்சிக் காலத்தில், விசா நிராகரிப்பு விகிதம் ஐந்து முதல் எட்டு சதவீதமாக இருந்தது. டிரம்புக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பைடன் காலத்தில் ஹெச்1பி விசா நிராகரிப்பு விகிதம் இரண்டு முதல் நான்கு சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post