இது உதயம் இல்லை; எங்கள் இதயம்! உடைக்கப்படும் சென்னையின் 40 வருட அடையாளம்

post-img
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்த உதயம் தியேட்டர் இடிக்கும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. சென்னையில் மையமான இதய பகுதியில் அமைந்திருக்கும் தியேட்டர் உதயம். பலர் இயக்குநர்களை ஏணியில் ஏற்றி அழகு பார்த்த திரையரங்கம். பல இயக்குநர்கள் தங்கள் படத்தின் 100 ஆவது நாளை இங்கே கொண்டாடி இருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஏமார்ந்து திரும்பிய ஆயிரக் கணக்கான சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆசை ஆசையாக உள்ளே நுழையலாம் என முட்டிமோதி உள்ளே டிக்கெட் கவுண்டர் பக்கம் போய் நிற்கும்போது 'ஹவுஸ்ஃபுல்' என்ற போர்டை பார்த்து நொந்து கொண்டு திரும்பியவர்கள் உண்டு. அவ்வளவு நினைவுகளைச் சென்னை மக்கள் மனதில் ஏற்றிவிட்ட இந்த உதயம் தியேட்டரை உடைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என அந்தக் காலத்திலேயே 4 திரையரங்குகளைக் கொண்டிருந்தது உதயம் காம்ப்ளக்ஸ். அந்தக் காலத்திலிருந்த சினிமா ரசிகர்களின் வருமானத்திற்குத் தகுந்த தரமான பொழுது போக்கு மையமாக மல்டிபிளக்ஸ் அனுபவத்தைக் கொடுத்ததும் இதுதான். இன்று 'புஸ்பா 2' படத்துடன் தனது 40 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளது. வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்திற்குப் பின் இதனை இடிக்கும் வேலைகள் தொடங்க உள்ளது. இங்கே 1983இல் முதன்முதலாக ரஜினியின் 'சிவப்பு சூரியன்' வெளியானது. இரண்டாவது 'சட்டம்'. அதன் பின்னர் வரிசையாக ஆயிரக்கணக்கான படங்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடி இருக்கின்றனர். 'காதலுக்கு மரியாதை', 'தளபதி' 'நாட்டாமை', 'படையப்பா', 'அவ்வை சண்முகி', 'தெனாலி', 'கில்லி' எனப் பல படங்கள் 200 நாட்கள்கூட ஓடி இருக்கின்றன. இதில் 'படிக்காதவன்', 'சந்திரமுகி', ஆகிய படங்கள் 275 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தன. இதை 1979இல் கட்ட தொடங்கினார்கள். 83இல் இயங்க ஆரம்பித்தது. இதன் உரிமையாளர்கள் மொத்தம் 6 பேர் அண்ணன் தம்பிகள். திருநெல்வேலியில் உள்ள உதயத்தூர் கிராமத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயராதவர்கள். அந்தக் காலத்தில் சில தியேட்டர்களிதான் 70எம்.எம். திரை வசதி இருந்தது. அதில் உதயமும் ஒன்று. அதில் படம் பார்ப்பதே பெரிய அனுபவம். சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இந்த தியேட்டர் தொடங்கப்பட்ட போது இந்தப் பகுதிக்கு பஸ் வசதியே கிடையாது. இரவு படம் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்காகத் தனியாகப் பேருந்து வசதியைச் செய்து கொண்டு வந்தது நிர்வாகம். அந்தளவுக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அசோக் நகர் இன்று ஹாட் ஆஃப் த சிட்டியாக மாறி இருக்கிறது. முதன்முதலாக 2 ரூபாய் டிக்கெட் விலையுடன் தொடங்கிய படிப்படியாக இப்போது அதிகபட்சமாக 105 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முழுவதும் ஏசி வசதி கொண்டது. கந்த 5 ஆண்டுகளாகவே இந்த 4 தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் குறைய தொடங்கிவிட்டது. இதே தியேட்டரின் பக்கம் இருந்த ஸ்ரீநிவாசாவும் இடிக்கப்பட்டுவிட்டது. காசி மட்டுமே இங்கே இயங்கி வருகிறது. இங்கே பல ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார்கள். தியேட்டர் தொடங்கிய நாளிலிருந்து வேலை பார்த்துவரும் நபர் ஒருவரும் இருக்கிறார். பாதி ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்து அனுப்பிவிட்டது நிர்வாகம். இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் 'இது உதயம் இல்லை. எங்களின் இதயம்' என்கிறார்கள். வேறு சிலர் 'எங்களின் தாய் வீடு' என்கிறார்கள். இந்த தியேட்டரில் உள்ள நாற்காலி, புரஜெக்டர் என அனைத்து பொருட்களையும் ஒருவர் விலைக்கு வாங்கிவிட்டார். உதயம் தியேட்டரில் 750 பேர் படம் பார்க்க முடியும். சென்னையில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள திரையரங்கம் இருந்து. இங்கே போடப்பட்ட இருக்கைகள் அனைத்து 83இல் போடப்படவைதான். இதுவரை பெரிய அளவுக்குச் சேதமாகாமல் தரமாக உள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post