வி. ராமசுப்பிரமணியன்: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட இவர் யார்? நியமனத்திற்கு எதிர்ப்பு ஏன்?

post-img
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த திங்கட்கிழமை (டிச. 23) உத்தரவிட்டார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரியங்க் கனூங்கு மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அருண் மிஷ்ரா கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, விஜய பாரதி சயனி, ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், வி. ராமசுப்பிரமணியன் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நியாயாமான முறையில் நடக்கவில்லை என்கிறது காங்கிரஸ். ஆனால், "காங்கிரஸ் எல்லா நியமனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்ப்பதாக," கூறுகிறார் பாஜகவின் நாராயணன் திருப்பதி. இவர் யார்? நீதித்துறையில் இவருடைய பயணம் எப்படிப்பட்டது? இவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் என்ன? இவரது நியமனத்தை சுற்றி எழும் சர்ச்சை என்ன? நாடு முழுவதும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்னைகளை தானே முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் திகழ்கிறது. மேலும், பல்வேறு வழக்குகளில் மத்திய அல்லது மாநில அரசுகளிடம் நேரடியாகவே அறிக்கைகளை கேட்கும் அமைப்பாக இது திகழ்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நேரில் அழைத்து விசாரிக்கும் உரிமை இதற்கு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தின் தலைவராக, ராமசுப்பிரமணியன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார். தமிழ்நாட்டின் மன்னார்குடியை சேர்ந்த வி. ராமசுப்பிரமணியன், சுமார் மூன்றரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நிலையில், ஜூன் 29, 2023-ல் ஓய்வு பெற்றார். இந்த பதவிக் காலத்தில் முக்கியமான பல வழக்குகளை கையாண்ட அமர்வுகளில் இவர் அங்கம் வகித்துள்ளார். இவர், 1958ம் ஆண்டு ஜூன் 30 அன்று மன்னார்குடியில் பிறந்தார். சென்னையிலுள்ள விவேகானந்தா கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்ற இவர், பின்னர் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்றார். கடந்த 1983ம் ஆண்டு, பிப்ரவரி 16 அன்று பார் கவுன்சில் உறுப்பினராக இணைந்தார். 1983-1987 வரை மூத்த வழக்கறிஞர்கள் கே. சர்வபௌமன் மற்றும் டி.ஆர். மணி போன்ற மூத்த வழக்கறிஞர்களிடம் பணியாற்றிய இவர், 23 ஆண்டு காலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் போன்ற நீதித்துறையின் பல்வேறு தளங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 31-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராமசுப்பிரமணியன், 2009-ம் ஆண்டு நவம்பர் 9 அன்று நீதிபதியாக நிரந்தரமாக்கப்பட்டார். அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் 2016, ஏப். 27-ல் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான (ஐதராபாத்) உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவுக்கென தனியாக உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அப்போது, அவர் தெலங்கானாவுக்கான ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 1, 2019 முதல் நீதிபதியாக இருந்தார். 2019, ஜூன் 22 அன்று இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 2019, செப்டம்பர் 23-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். இவர், 'கம்பனில் சட்டமும் நீதியும்' என, கம்பரமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் பல முக்கியமான தீர்ப்புகளை இவர் வழங்கியுள்ளார். குறிப்பாக, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முந்தைய பாஜக அரசு 2016ல் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இவரும் ஒருவர். கடந்த 2018 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை கையாளும் (வாங்குவது, விற்பது உள்ளிட்டவை) தனிநபர்கள் அல்லது வணிக நிறுவனங்களுக்கு, சேவைகளை வழங்குவதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ராமசுப்பிரமனியன் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2016-ல் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதற்கு எதிரான வழக்கில், "மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது இழிவானது அல்ல" என்றும், "ஒவ்வொருவரும் தங்கள் கர்வத்தை விடுத்து, கழிவறையை சுத்தம் செய்தால் தான் சாதியை அழித்தொழிக்க முடியும் என மகாத்மா காந்தியே ஆதரித்துள்ளார்" என்றும் நீதிபதி ராமசுப்பிரமணியன் மற்றும் வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்ததாக 'தி இந்து' ஆங்கில ஊடகம் அந்த சமயத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அரசியலமைப்பு, தொழிலாளர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் வழக்குகளை இவர் கையாண்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையில் ஓர் சவாலாக உள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகம் நடத்திய கலந்துரையாடலில் வி. ராமசுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, பல முக்கியமான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "பல வழக்குகளில் விசாரணைகள் உரிய நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு அமர்வில் குறிப்பிட்ட வழக்கு எப்படி பட்டியலிடப்படுகிறது, இரு தரப்பு வழக்கறிஞர்களும் எப்படி ஒத்துழைக்கின்றனர் ஆகியவை வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்படுவதில் முக்கிய பங்காற்றுகின்றன" என தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவெளியில் தங்கள் சொத்துக்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்கு ஆதரவாகவும் அவர் பேசியிருக்கிறார். தன்னுடைய சொத்துக்கள் குறித்து பொதுவெளியில் தகவல் பகிரப்படுவது குறித்துத் தனக்குக் கவலை இல்லை என அவர் கூறியுள்ளார். பல்வேறு வழக்குகளில் நீதிபதிகள் பலவித கருத்துகளை வழங்குவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "கருத்துகளை மட்டும் ஊடகங்கள் பெரிதாக்குகின்றன, பலரும் தீர்ப்புகளை வாசிப்பதில்லை. எங்களுடைய வேலை தீர்ப்புகளை எழுதுவது. தலைப்புச் செய்திகளை உருவாக்குவதல்ல" என கூறினார். சனாதனம் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு, "நான் இந்து மதத்தை சார்ந்த சனாதனியாக இருந்தால், அவருடைய பேச்சு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். வேறு மதத்தை சார்ந்தவராக இருந்தால் பேச்சு சுதந்திரமாக அதை கருதுவேன். நாம் நம்பும் விஷயங்களாலேயே நாம் வழிநடத்தப்படுகிறோம், அதுதான் பிரச்னை. ஒரு விஷயத்தை யார் சொல்கிறார், அவர் எந்த தரப்பை சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து அந்த விஷயம் தொடர்புப்படுத்தப்படுகிறது" என கூறினார். இந்நிலையில் தான், வி. சுப்பிரமணியத்தை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தது தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது காங்கிரஸ். ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் கூட்டம் கடந்த டிச. 18 அன்று கூடியது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள குறிப்பில், மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் தேர்வு முறையில் அடிப்படையிலேயே தவறு இருப்பதாக தெரிவித்துள்ளது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதாகவும், இத்தகைய விவகாரங்களில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கூறுகிறது. அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன் மற்றும் குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகியோரை தங்கள் கட்சி பரிந்துரைத்ததாக காங்கிரஸ் தெரிவித்தது. இவர்களுள் நாரிமன் சிறுபான்மை பார்சி சமூகத்தையும் மேத்யூ ஜோசப் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். உறுப்பினர் பதவிகளுக்கு எஸ். முரளிதர் மற்றும் அகில் அபுல்ஹமீத் குரேஷி ஆகியோரை காங்கிரஸ் பரிந்துரைத்தது. மனிதநேயம் தொடர்பான வழக்குகளில் இவர்களின் பங்களிப்புகளையும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மதம், சாதி, சமூகம், பிராந்தியம் என அனைத்துத் தரப்பிலும் பன்முகத்தன்மை இருக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. தாங்கள் பரிந்துரை செய்த நபர்களை தேர்வு செய்யாதது, தேர்வு முறையில் பாரபட்சமற்ற தன்மை மற்றும் நேர்மை தொடர்பான கவலைகளை எழுப்புவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "முந்தைய ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறையைத் தான் இப்போதும் பின்பற்றுகின்றனர். காங்கிரஸ் எல்லா நியமனங்களிலும் இதுபோன்று கேள்வி எழுப்புகிறது. எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தக் கூடாது. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பது குறித்து பெருமையாக கருத வேண்டும்." என்றார். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தேர்வுக்குழுவில் இருப்பதை அரசுக்கு ஆதரவான ஒன்றாகக் கருதக்கூடாது என்றும் அவர் கூறினார். "இப்பதவி குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவது" என அவர் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ததால் வி. ராமசுப்பிரமணியனை அரசுக்கு ஆதரவானவராகக் கருதக்கூடாது என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். "தீர்ப்பை தீர்ப்பாக மட்டும்தான் பார்க்க வேண்டும்" என அவர் கூறினார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவில், உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை சபாநாயகர், மக்களவை - மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். இதில், எதிர்க்கட்சியின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள் வாதிடுகின்றனர். இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், "எதிர்க்கட்சி சார்பாக இருவர்தான் அந்த குழுவில் உள்ளனர். இதன்மூலம், மத்திய அரசுக்கு ஆதரவானவர்களை மிக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவதாக அச்சம் உள்ளது. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை நியாயமானதாக இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ததால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவாரா என்பதை இப்போது சொல்ல முடியாது. அவருடைய நடவடிக்கைகளை பொருத்துதான் பார்க்க வேண்டும்" என்றார். ராமசுப்பிரமணியத்தை விட மூத்த நீதிபதிகள் இரண்டு-மூன்று பேர் இருந்தபோதிலும் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதாக கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். "இன்று உயர் பொறுப்புகளில், எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தான் ஆட்கள் நியமிக்கின்றனர். இந்தியாவில் நடக்கக்கூடிய மனித உரிமை மீறல்களை கண்காணிக்கக்கூடிய மிக முக்கியமான அமைப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம். அந்த அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் நேர்மையாக, வெளிப்படையாக இல்லை என எதிர்க்கட்சிகள் எழுப்பியிருப்பது கவலைக்குரியது" என்கிறார் வெற்றிச்செல்வன். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post