சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடந்து வந்த நிலையில், அதில் குகேஷ் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தார். கடைசி போட்டி டிராவில் முடியும் என்றே பலரும் எதிர்பார்த்த போதிலும், குகேஷ் வெற்றி பெற்றார். இதற்கிடையே குகேஷ் வெற்றி தொடர்பாக ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் சந்தேகம் கிளப்பியுள்ளார். சீன வீரர் வேண்டுமென்றே தோற்றது போல இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரன் ஆகியோர் களமிறங்கினர்.
குகேஷ்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 14 சுற்றுகளில் போட்டி நடக்கும். அதில் எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ.. அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதல் 13 சுற்றுகளில் கடும் போட்டி நிலவியது. குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வென்றிருந்த நிலையில், மற்ற போட்டிகள் டிராவில் முடிந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று இருந்தனர்.
கடைசி போட்டி 14வது சுற்றுப் போட்டி நேற்று நடந்த நிலையில், அதில் சீனாவின் டிங் லிரன் வெள்ளை நிற காய்கள் உடனும் குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். அதில் கடைசி நிமிடம் வரை கூட போட்டி டிராவில் முடியும் என்றே பலரும் நினைத்தனர். டிராவில் முடிந்தால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும் என்பதால் பலரும் அதையே எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
தவறு: ஆனால், கடைசி நேரத்தில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்தது. போட்டியில் அழுத்தம் அதிகரித்த நிலையில், ஆட்டத்தின் 55ஆவது நகர்வில் டிங் லிரன் ஒரு மேஜர் தவறு செய்தார். அவரது ரூக், அதாவது யானை காயை லிரன் F4இல் இருந்து F2க்கு நகர்த்தினார். இதுவே அவர் செய்த ஒரே தவறு. இந்த தவறை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட குகேஷ் வெற்றி பெற்றார்.
சந்தேகம்: இதற்கிடையே டி.குகேஷ் வெற்றி தொடர்பாக ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ் சந்தேகம் கிளப்பியுள்ளார். அதாவது குகேஷுக்கு எதிராகப் போட்டியிட்ட சீனாவின் டிங் லிரன் வேண்டுமென்றே தோற்றதாகக் குற்றம் சாட்டினார். மேலும், போட்டி முடிவுகள் தொடர்பாகச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஆண்ட்ரே ஃபிலடோவ் அளித்துள்ள பேட்டியில், "ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் நடந்த சில விஷயங்கள் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது. அப்போது சீன செஸ் வீரரின் அந்த மூவ் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை தேவை: டிங் லிரன் அப்போது இருந்த நிலையில் இருந்து, தோற்று இருக்கிறார் என்பதை ஏற்க முடியாது. ஆட்டத்தில் சீன செஸ் வீரரின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அவர் ஏதோ வேண்டுமென்றே தோல்வி அடைந்தது போலவே தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.