உலகெங்கும் இப்போது ஏஐ குறித்தே பேச்சாக இருக்கும் நிலையில், இதனால் வரும் காலத்தில் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சமீபத்திய வீடியோவில் விளக்கியுள்ளார்.
இப்போது உலகில் எங்குப் பார்த்தாலும் ஏஐ அதாவது artificial intelligence குறித்தே பேச்சாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வந்த பிறகு ஒட்டுமொத்த உலகமும் இதைப் பற்றிப் பேசுகிறது.
சாட் ஜிபிடி முதல் ஏஐ கருவி இல்லை. இதற்கு முன்பே நாம் பல ஏஐ கருவிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சாட் ஜிபிடி போல வலுவான ஒரு ஏஐ கருவியை நாம் பார்த்ததே இல்லை எனச் சொல்லலாம். சாட் ஜிபிடி ஏஐ துறையை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தியது.
ஏஐ: சாட் ஜிபிடியில் நாம் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை நறுக்கெனத் தரும். கதை கேட்டால் கதை சொல்லும்.. ஜோக் கேட்டால் ஜோக் சொல்லலும் அவ்வளவு ஏன் கவிதை, லவ் லெட்டர் என அனைத்தையுமே சொல்லும் அந்தளவுக்கு ஒரு வலுவான ஏஐ கருவியாக சாட் ஜிபி இருக்கிறது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இது வேலை செய்யும் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.
சாட் ஜிபிடிக்கு கிடைத்த இந்த வெற்றி மற்ற பல ஏஐ நிறுவனங்களுக்கு மிக பெரிய வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது ஏஐ கருவிகள் வந்து நம்மை வியக்க வைத்து வருகிறது. ஏஐ துறையில் ஏற்படும் மாற்றங்கள் என்பது மிக பெரிய பாய்ச்சலாக இருந்தாலும் சிலர் இது குறித்து கவலை தெரிவித்தும் வருகின்றனர். ஏஐ கருவிகளால் அதிகப்படியான வேலையிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பலரும் வார்ன் செய்து வருகின்றனர்.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் ஏஐ என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கியுள்ளார். மேலும், ஏஐ-இல் இருந்து தப்பிக்க நாம் எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை ஏஐ என்பது வெறும் ஹைப் தான். முன்பு கிரிப்டோகரன்சிக்கு இருந்தது போலத் தான்.. கிரிப்டோகரன்சிக்கு எந்த பயனும் இல்லை. ஆனால், ஏஐ-க்கு பயன் நிறைய இருக்கிறது.
இவர்கள் சொல்வது போல அது உலகத்தையே எல்லாம் மாற்றிவிடாது. கூகுள் நம்மைச் சுற்றிப் பல காலமாக இருக்கிறது.. கூகுள் மேப்பும் இங்கே பல ஆண்டுகளாக இருக்கிறது. கூகுள் தவறான வழியைக் காட்டுவது இப்போதும் கூட நடக்கவே செய்கிறது. இதுவும் ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு தான்.. முன்பெல்லாம் பிரின்ட் செய்யப்பட்ட மேப்.. அல்லது அங்கே இருக்கும் யாரையாவது நம்பி செல்வோம்.. ஆனால், இப்போது கூகுள் மேப்பை நம்பி செல்கிறோம். அதில் இப்போதும் சிக்கல் இருக்கிறது.
இந்த திறன் வேண்டும்: மேலும், கூகுளில் சரியான கேள்வியைக் கேட்டால் மட்டுமே முறையான பதிலைச் சொல்லும். சரியான கேள்வியைக் கேட்கத் தெரியவில்லை என்றால் ஏஐ வந்தும் பயனில்லை. சரியான கேள்வியைச் சரியான முறையில் கேடும் திறன் வேண்டும்." என்று தெரிவித்தார். மற்றொரு பழைய வீடியோவில், முன்பு எப்படி dot com bubble, crypto bubble இருந்ததோ.. அதேபோல இப்போது ஏஐ bubble இருப்பதாகவும் சில ஆண்டுகள் சென்றால் மட்டுமே இதில் ஒரு தெளிவு கிடைக்கும் எனக் கூறியிருந்தார்.
ஏஐ என்பது கீழ்மட்ட வேலைகளை மட்டுமே காலி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாட் ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேனும் கூட ஏஐ என்பது "ஒருவருக்கு 100 உதவியாளர்களைத் தருவதற்குச் சமம்" என்றே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முதலீடு சார்ந்த தகவல்களைத் தெரிந்து கொள்ள அடிப்படை கணக்கும், ஸ்டாட்டிஸ்டிக்ஸை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.