ஜரூராக தேர்தல் களத்தில் "இந்தியா" அணி! தொகுதி பங்கீடு பேச்சுகள் தொடக்கம்!

post-img

டெல்லி: "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் "இந்தியா" கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


"இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூக குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் என்சிபி தலைவர் சரத்பவார் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது: "இந்தியா" அணி கட்சிகளிடையேயான லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். "இந்தியா" கூட்டணியின் முதலாவது பொதுக் கூட்டம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். இவ்வாறு கே.சி. வேணுகோபால் கூறினார்.


தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவ ஒமர் அப்துல்லா கூறியதாவது: "இந்தியா" கூட்டணி கட்சிகள் தங்களுக்கு என ஒதுக்கீடு செய்திருக்கும் தொகுதிகளில் எந்த சிக்கலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என திட்டமிட்டுள்ளோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை எந்த கட்சி நிறுத்துவது? என்பது குறித்து விவாதித்தோம். அதனடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.


"இந்தியா" கூட்டணி இதுவரை 3 ஆலோசனைக் கூட்டங்களை பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் நடத்தி உள்ளன. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்தான் இன்று நடைபெற்றது.

 

Related Post