ஆஹா முதல்வரையே வீழ்த்திட்டாங்களே! தெலுங்கானாவில் எழுச்சிபெற்ற பாஜக!

post-img

ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியின் விளிம்பில் உள்ள நிலையில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வி முகத்தில் உள்ளது. இதற்கிடையே தான் பாஜக 3வது பெரிய கட்சியாக எழுச்சி பெற்றுள்ளது. அதோடு பாஜக வேட்பாளர் வெங்கட ரமணா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அன்றயை தினம் ஒரே கட்டமாக 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பிஆர்எஸ் கட்சி 341 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இத்தனை வாரிசுகளா? தெலங்கானாவில் பிஆர்எஸ் தோல்விக்கு என்ன காரணம்? கேசிஆரை வாரிவிட்ட குடும்ப அரசியல்
இதற்கு அடுத்தப்படியாக பாஜக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அடுத்ததாக ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 4 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் பாஜகவை வளர்க்க மேலிடம் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் அந்த கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது இல்லை. இது பாஜகவுக்கு பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆனாலும் தென்மாநிலங்களை பொறுத்தமட்டில் பாஜகவுக்கு கர்நாடகாவை தவிர தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் செல்வாக்கு இல்லை. அதனடிப்படையில் தெலுங்கானாவில் பாஜக தனித்து போட்டியிட்டால் பெரிய அளவில் வெற்றியை பெற முடியாது என்றே கணிக்கப்பட்டது. இது தான் தற்போது நடந்துள்ளது.
இருப்பினும் கூட வெற்றிகரமான தோல்வி என்ற வகையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் என்பது பாஜகவுக்கு அமைந்துள்ளது. ஏனென்றால் கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக மொத்தம் 6.98 சதவீத ஓட்டுகளை பெற்று 1 தொகுதியில் மட்டுமே வென்றது. அதன் பிறகு நடந்த அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட இடைத்தேர்தல்களில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.
காங்கிரஸை விடவேமாட்டோம்..தெலுங்கானாவில் கூட்டணி போடும் பிஆர்எஸ்,பாஜக, ஓவைசி கட்சி? பெரிய ட்விஸ்ட்
அதாவது கோஷா மஹால் தொகுதியில் டி ராஜா சிங், கத்வால் தொகுதியில் அருணா, போத் (தனி) தொகுதியில் ராதோடு பாபுவும், ஹூசுராபாத் தொகுதியில் எட்டலா ராஜேந்தர், பதஞ்சரு தொகுதியில் குடம் மகிபால் ரெட்டி, துபாக் தொகுதியில் ரகுநந்தன் ராவ் உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏக்களாக இருந்தனர்.
ஆனால் இந்த தேர்தலில் பாஜக தெலுங்கானாவில் எழுச்சி பெற்றுள்ளது. ஆட்சி அதிகாரத்துக்கு வர முடியாவிட்டாலும் கூட தற்போது பாஜக கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போது 5 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு உள்ள நிலையில் இந்த தேர்தலில் மொத்தம் 8 தொகுதிகளில் ‛தாமரை' வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் பாஜக வேட்பாளர் கட்டிபள்ளி வெங்கட ரமணா காமரெட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார்.
அதேபோல் பாஜக சார்பில் அடிலாபாத் தொகுதியில் பயல் சங்கர், நிர்மல் தொகுதியில் அலட்டி மகேஷ்வர் ரெட்டி, ஆர்மூர் தொகுதியில் பைதி ராகேஷ் ரெட்டி, நிஜமாபாத் (Urban) தொகுதியில் தனபால் சூர்நாராயணா வெற்றி பெற்றுள்ளார்.
இப்படி 5 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3 தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதன்படி சிர்புரா தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் பல்வாய் ஹரிஷ் பாபு, முதோல் தொகுதியில் ராமராவ் பவார், கோஷா மஹால் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ டி ராஜா சிங் ஆகியோர் பாஜக சார்பில் முன்னிலையில் உள்ளனர்.

 

Related Post