குமாரபாளையத்தில் குடிகாரர்கள் கும்மாளம்.. போலீசார் கொடுத்த நூதன தண்டனை!

post-img
நாமக்கல்: காவிரி ஆற்றின் பழைய பாலத்தில் ஆபத்தான முறையில் அமர்ந்து, குடித்துக்கொண்டே மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களை போலீசார் கண்டித்து அனுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகிறது. இருக்குற டென்ஷனுக்கு ஒரு பீர் அடிச்சா சில்லுனு இருக்கும் என்று நம்மில் பலர் யோசிப்பது உண்டு. ஆனால் அந்த பீரால்தான் பிரச்சனையும், டென்ஷனும் வருகிறது என்றால் எதுக்கு அது? இப்படி மதுவால் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலரும் இடர்பாடுகளை சந்தித்திருக்கின்றனர். ஓடும் பஸ்ஸை ஒற்றை கையில் நிப்பாட்டுறேன் என வீம்பு செய்து டயருக்கு அடியில் விழுந்து கிடப்பது, கொட்டும் மழையில் ஒன்றுமே நடக்காத மாதிரி வீடு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வாசலை தேடி செல்வது.. இது எல்லாம் உற்சாக பானம் செய்யும் வேலைகள்தான். அப்படியான ஒரு சம்பவம்தான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்திருக்கிறது. குமாரப்பாளையம் வழியாக பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே பழைய காவிரி பாலம் ஒன்று இருக்கிறது. இந்த பாலத்தில் அமர்ந்து இளைஞர்கள் சிலர் மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் அது ஆபத்தான முறை என்பதால் போலீசார் அதை அனுமதிப்பதில்லை. ஆனால் நேற்றைய தினம் போலீசின் கெடுபிடிகளை மீறிய 4 பேர் இந்த பாலத்தில் அமர்ந்து மீன் பிடித்துள்ளனர். பங்குனி வெயில் பல்லை காட்டி அடிக்கும்போது வேறு என்ன செய்வது என்று தெரியாததால் இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். பாலத்தின் மீது செல்லும் வாகனங்களின் இரைச்சலும், புகையும் தெரியாமல் இருக்க இரண்டு மூன்று குப்பிகளை அவர்கள் தங்களுக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது, காவிரியின் பழைய பாலம், தேம்ஸ் நதியின் பாலத்தை போன்ற ஒரு ஃபீலிங்கை கொடுத்திருக்கிறது. அப்புறம் என்ன.. மீதம் இருக்கும் குப்பிகளையும் திறந்து கிளாஸில் ஊற்றி, தேம்ஸ் நதி மீது பறக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பற்றி போலீசுக்கு எந்த கவலையும் இல்லை. அந்த பக்கமாக ஜீப் சென்றுகொண்டிருக்கும்போது, சம்பந்தமே இல்லாத 4 பேர் சில்வர் டம்ளரில் எதையோ பரிமாறிக் கொண்டிருப்பதை காக்கி சட்டை அதிகாரிகள் நோட்டம் விட.. ஜீப் பத்தடி தள்ளி நின்றிருக்கிறது. இறங்கி வந்து விசாரித்தபோதும் போதுமான தகவல்கள் கிடைக்கப்பெறததால், மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை பாலத்தின் விளிம்பிலிருந்து பத்திரமாக அழைத்து வந்திருக்கின்றனர் காக்கி சட்டை அதிகாரிகள். இந்த சம்பவத்தின்போது 4 பேரும் நடந்துக்கொண்ட விதமே, அவர்கள் மது அருந்தியிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்தது. பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துவது, ஆபத்தான முறையில் மீன் பிடிப்பது போன்றவை சட்டவிரோத செயல்களாகும். போதையில் இருந்த அவர்களுக்கு இந்த விஷயத்தை போலீசார் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். உற்சாகமில்லாத இந்த உலகத்திலே, உற்சாக பானம் அருந்தியது தவறா? என்கிற ரீதியில் கூட்டத்தில் இருந்த இளைஞர் போலீசாரை ஏறெடுக்க, அந்த நொடியில் அவர்கள் நால்வருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. 4 பேரும் வரிசையில் நின்று தோப்புக்கரணம் போட்டனர். அந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங். வீடியோ குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

Related Post