இனி ஸ்விக்கி, ஜோமேட்டோவில் உணவு விலை குறையும்.. ஜிஎஸ்டி கவுன்சிலில் நிர்மலா சொல்லும் குட்நியூஸ்

post-img
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமீயங்கள் மீதான வரி விகிதம் குறைப்பதோடு, ஸ்விக்கி, ஜோமேட்டோவில் ஆர்டர் செய்யும்போது வசூலிக்கப்படும் வரியை குறைக்கவும் வாய்ப்புள்ளது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பது நடத்தப்பட்டு வருகிறது. இந்த முக்கிய நோக்கம் என்பது அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி மக்களின் நன்மைக்காக ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தான். அந்த வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தான் இன்றைய கூட்டம் தொடர்பான முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளது. அதாவது இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நம் நாட்டில் மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் அனைத்து தனிநபர் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாகக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் விலக்கு நீட்டிக்கப்படுவது பற்றியும் ஆலோசித்து இறுதி முடிவு என்பது எட்டபடலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற உணவு டெலிவரி தளங்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இவற்றிற்கு வரி விதிப்பு 18 சதவீதமாக உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்கலாமா? என்று விவாதிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி கட்டணம் குறையலாம். மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து கார்களுக்கான விற்பனை கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் அழகுசாதனப் பொருட்கள், கடிகாரங்கள், காலணிகள், ஹேண்ட்பேக் போன்ற லைப்ஸ்டைல் பொருட்களின் விலை அடிப்படையில் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த்துவது பற்றியும் இன்று ஆலோசிக்கப்பட உள்ளது. இதுதவிர விமானத்திற்கான எரிபொருளை(ஏடிஎப்)ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Related Post