சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்து 5 பேர் காயமடைந்த நிலையில் 2 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் இன்று திடீர் விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்த விபத்தில் காயம் அடைந்த 5 தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த 2 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போன 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. விபத்திற்குக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.