மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு,தெற்கு மற்றும் அம்மன் கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணிக்குள் பாலாலயம் நடைபெறவுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோவில் இன்றளவும் திகழ்கிறது.
12 மாதங்களும் திருவிழா நடைபெறும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், குறிப்பாக சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும் ஆவணி மூலம் திருவிழாவில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீனாட்சி கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்துக்கு ஆளானது. இவ்விபத்தில் அக்குறிப்பிட்ட வசந்தராயர் மண்டபம் முழுவதும் தீக்கிரையாகி, கலைநயமிக்க கல்தூண்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. அதனைப் புனரமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநில அளவிலான வல்லுநர் குழு இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில், கண்காணிப்பு தொல்லியலாளர் மூர்த்தீஸ்வரி, ஓய்வு பெற்ற தொல்லியல் துறை வல்லுநர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, அமைப்புப் பொறியியல் வல்லுநர் முத்துசாமி, சைவ ஆகம வல்லுநர் சந்திரசேகர பட்டர் என்ற ராஜா பட்டர், வைணவ ஆக வல்லுநர் கோவிந்தராஜ பட்டர் ஆகியோர் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தனர். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.25 கோடி மதிப்பில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி தற்போது கோபுரத்தில் மராமத்து பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. எனவே திருப்பணிகள் மேற்கொள்ள உபயதாரர்கள் சிலர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு ராஜகோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் என 5 கோபுரங்களில் திருப்பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
அந்த திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலய பூஜை செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலாலய பூஜைக்கு பின்னர் கோபுர திருப்பணிகள் தொடங்கும். கோபுரங்களில் சாரம் கட்டுவதற்கு சுமார் 4 மாதம் ஆகும். அதன் பின்னர் சேதம் அடைந்த சிலைகள், கோபுரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீரமைத்து, பெயிண்ட் அடித்து இந்த பணிகள் முடிவடைய சுமார் 2 ஆண்டு காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த பணிகளும் 2 ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. எனவே 2026ஆம் ஆண்டுக்குள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.