மும்பையை சூறையாட வரும் தேஜ் புயல்... பெயர் வைத்தது யார்? என்ன அர்த்தம் தெரியுமா?

post-img

சென்னை: அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சில நாட்களில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தேஜ் என்று பெயரிடப்பட்டுள்ள புயலுக்கு பெயர் வைத்தது யார். தேஜ் புயலுக்கான அர்த்தம் என்ன என்று பார்க்கலாம்.
சூறாவளி: சர்வதேச அளவில் புயல்கள் பல்வேறுப் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு சூறாவளிக்கும் குழப்பத்தைத் தவிர்க்க வானிலை முன்னறிவிப்பாளர்களால் பெயரிடப்பட்டது. வெப்பமண்டல சூறாவளிகள் பொதுவாக பிராந்திய மட்டங்களில் உள்ள விதிகளின்படி பெயரிடப்படுகின்றன.
புயல்: மேற்கிந்தியத் தீவுகளில் ஹரிகேன், (சூறாவளி), அமெரிக்காவில் டொராண்டோ (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் டைபூன் (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் வில்லி வில்லி என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.


புயலுக்கு பெயர்: கடலில் உருவாகும் புயல்களுக்கு தனித்தனியாக பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியாவும் பின்னர் அமெரிக்காவும் தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை பின்பற்றுகிறனர்.


எத்தனை நாடுகள்: அந்த வகையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள வங்கக் கடல், அரபிப் கடல்களில் உருவாகும் புயல்களுக்கு இந்த மண்டலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் முதன்முறையாக 2004ம் ஆண்டில் அட்டவணையை தயாரித்தபோது இந்த எட்டு நாடுகள் சார்பில் தலா 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன. இதில் 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்ட்டு விட்டன. இதில் தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட ஆம்பான் என்ற பெயா் மட்டும் தற்போது மீதமுள்ளது.

 

13 நாடுகள்: புதியதாக இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் புயல்களுக்கு பெயரிட உலக வானிலை அமைப்பு (WMO) புதிய பெயர் பட்டியலை தயாரித்தது. இந்தப் புதிய பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சேர்த்து ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து புதிய உறுப்பு நாடுகளும் பெயர்களை பரிந்துரைத்துள்ளன.


இந்தியா சூட்டிய பெயர்கள்: இந்தப் பட்டியலில் 13 உறுப்பு நாடுகளுக்கு தலா 13 புயல் பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான பெயர்களில் முரசு, நீர், கதி, தேஜ், ஆக், வயோம், ஜார், புரோபஹோ, பிரபஞ்சன், குர்னி, அம்புட், ஜலாதி மற்றும் வேகா ஆகியவை இடம்பெற்றுள்ளன.


தமிழ் பெயர்கள்: 169 பெயர்கள் கொண்ட பட்டியலில் 28வது இடத்தில் 'முரசு' எனும் பெயரும், 93வது இடத்தில் நீர் என்ற பெயரும் தமிழ் பெயர்கள் ஆகும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் இந்தியக் கடல்களில் இனி உருவாகும் புயலுக்கு முதன்முறையாக தமிழில் பெயர்கள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் உள்ள 'தேஜ்' தான் அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு பெயராக சூட்டப்பட உள்ளது.


தேஜ் புயல் அர்த்தம்: தேஜ் என்றால் ஒளி, பளபளப்பான, சக்தி, புத்திசாலித்தனம், மகிமை, பாதுகாப்பு, பிரகாசமான மற்றும் பிரகாசம் என பல அர்த்தங்களை சொல்கிறது. மும்பையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள தேஜ் புயல் அதிகன மழையையும் பயங்கர சூறாவளியையும் உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேஜ் சக்தியில் இருந்து மும்பை தப்பிக்குமா? தாக்கு பிடிக்குமா பார்க்கலாம்.

 

Related Post