தமிழ்நாட்டின் பல வெற்றிக் கதைகளுக்கு பின்னால் நிற்கும் இந்த ஜி ராஜேந்திரன் ஒரு சாதாரண தங்க மதிப்பீட்டாளர். இன்றைக்கு நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார். 80 வயதான ராஜேந்திரன் தங்கம், நகைகள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்களுக்குச் சொந்தக்காரர். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.15700 கோடி ஆகும்.
ஜிஆர்டி ஜுவல்லர்ஸில் இருந்து ராஜேந்திரன் தனது பெரும்பகுதி வருவாயைப் பெறுகிறார். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தங்க மதிப்பீட்டாளராக முதல் வேலையில் சேர்ந்தார். பின்னர் தனக்கென்று ஒரு தொழில் தொடங்க நினைத்து சிறிய அளவில் ஒரு நகைக்கடையை வைத்தார்.
500 சதுர அடி பரப்பளவு கொண்ட அவரது கடைக்கு வாடகை 1964 ஆம் ஆண்டில் மாதம் ரூ.100. அவரது கடையின் பெயர் ஜிஆர் தங்கமாளிகை. 1979இல் பெரிய அளவில் ஜிஆர்டி கடையை திறந்தார். காலப்போக்கில் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். இப்போது முன்னணி நகைக்கடையாக வளர்ந்து விட்ட ஜிஆர்டி வைரம், தங்கம், பிளாட்டினம், வெள்ளி நகைகளை செய்து வருகிறது.
60 ஆண்டுகள் பழமையான ஜிஆர்டி நகைக்கடையை ராஜேந்திரனின் மகன்கள் ஜிஆர் அனந்தபத்மநாபனும் ஜிஆர் ராதாகிருஷ்ணனும் நிர்வகித்து வருகின்றனர். சென்னையில் உள்ள ஜிஆர்டி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரிக்கு தலைவராக ராஜேந்திரன் உள்ளார். அவரது சேவையை ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் என 14 நகரங்களில் நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடைகளில் ஜிஆர்டி நகைக்கடை மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளது. வருடத்துக்கு பல கோடிகளை குவித்து வருகிறது. விதவிதமான இறக்குமதி நகைகளையும் ஜிஆர்டி நகைக்கடையில் விற்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படி ஆகக்கூடிய சேதாரம், செய்கூலியை வசூலிப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் ஜிஆர்டி நகைக்கடையில் நகைகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஜிஆர்டியின் ஹோட்டல்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. முக்கியமான நகரங்களில் இந்த ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் இருப்பதால் எப்போதும் இங்கு அறைகளுக்கு டிமாண்ட் உள்ளது. நகை வியாபாரத்தில் தனக்கென்று தனி முத்திரையை ஜிஆர்டி நகைக்கடை மூலம் ராஜேந்திரன் பதித்துள்ளார்.