ஹைதராபாத்: நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நேற்று நடந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை நடிகர் நாகார்ஜுனா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் தனது மருமகள் சோபிதாவை குடும்பத்திற்கு வரவேற்று ஒரு நெகிழ்ச்சியான மெசேஜ்ஜை ட்வீட் செய்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
நாக சைதன்யா கடந்த 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2021ம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர்.
திருமணம்: இந்தச் சூழலில் தான் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், நேற்று திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. அங்குள்ள பிரபல அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நாகர்ஜுனாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கிடையே திருமணம் நடந்து முடிந்த பிறகு, நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் கல்யாண போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அன்புள்ள சோபிதா: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் இந்த திருமண போட்டோக்கள் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோக்களை பகிர்ந்த நாகார்ஜுனா, தனது மருமகளுக்கு நெகிழ வைக்கும் வகையில் ஒரு மெசேஜ்ஜையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும் சைதன்யா ஒன்றாகத் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. என் அன்பான சைதன்யாவுக்கு வாழ்த்துகள்.. அன்புள்ள சோபிதா.. ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிட்டாய்.
ஏஎன்ஆரின் (நாகார்ஜுனாவின் தந்தை) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட அவரது சிலையின் கீழ் திருமணம் நடந்துள்ளது. இது இன்னும் ஆழமான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவரது அன்பும் வழிகாட்டுதலும் இருப்பது போல் உணர்கிறேன். எங்கள் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். நாகார்ஜுனா இந்த ட்வீட்டை போட்ட சில நிமிடங்களிலேயே இது டிரெண்ட் ஆனது.
போட்டோ: நாகார்ஜுனா பகிர்ந்த இந்த திருமண போட்டோக்களில் சோபிதா பாரம்பரிய காஞ்சிவரம் பட்டுப் புடவை, திருமண நகைகள் அணிந்து இருக்கிறார். நாக சைதன்யாவும் வெள்ளை நிற உடையை அணிந்து இருக்கிறார். இந்த தம்பதியின் போட்டோக்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். திரையுலகில் இருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் உள்ளிட்ட சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
நாக சைதன்யா- சோபிதா தம்பதியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த வாரம் தொடங்கியது. முதலில் அவர்களின் ஹல்டி விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மணப்பெண் அழைப்பு உள்ளிட்ட விழாக்கள் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட அசத்தலான போட்டோக்களை சோபிதாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
நாகார்ஜுனா: நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையும் நாகார்ஜுனா தான் தனது ட்விட்டரில் அறிவித்தார். இது தொடர்பாக அவர், "எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சோபிதாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.. அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறோம்" என்று பதிவிட்டு இருந்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage