பழமையான இடம்.. பாரம்பரிய உணவு.. விருதுநகரை கலக்கும் இயற்கை ஹோட்டல்!

post-img

கலகலப்பு திரைப்படத்தில் வரும் மசாலா கபே போன்று விருதுநகரில் இயங்கி வரும் உணவகம் ஒன்று மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படமான கலகலப்பு திரைப்படத்தில், மிர்ச்சி சிவா விமல் இருவரும் பழமையான ஒரு வீட்டை உணவகமாக மாற்றி அதில் இயற்கை உணவுகளை விற்று வெற்றி பெறுவர்.அதே பாணியை பின்பற்றி கும்பகோணம் மசாலா கபே வை போன்று விருதுநகரில் பீமா ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இயற்கை உணவகம் ஒன்று மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயற்கை உணவகம்:

எப்படி அந்த திரைப்படத்தில் மசாலா கபேவில் முடக்கத்தான் கீரை தோசை போன்ற பாரம்பரிய உணவுகளை கொடுத்து மக்களின் வரவேற்பை பெற்றார்களோ ! அதே போன்று பழைய வீட்டை ஹோட்டலாக மாற்றி முடக்கத்தான் கீரை தோசை, பீட்ரூட் பூரி, உளுந்தங்களி, கருப்புகவுணி தோசை போன்ற பாரம்பரிய உணவுகளை தயார் செய்து பார்வையாளர்கள் மத்தியில் விருதுநகரின் மசாலா கபே என்று பெயர் பெற்றுள்ளனர்.

இது பற்றி பேசிய பீமா உணவக உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு கிடைத்தாத இயற்கை உணவுகளை கொடுக்க வேண்டு என்ற நோக்கில் இந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் உளுந்தங்களி, கருப்புகவுணி போன்ற பொருட்களின் அருமை மக்களுக்கு தெரிந்தாலும் அதை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியவில்லை, இது போன்ற உணவுகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற தான் இதை லாபம் பார்க்காமல் தொடங்கியதாகவும், தற்போது நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மசாலா கபே ஐடியா பற்றி அவரிடம் கேட்ட போது, அந்த படத்தை பார்த்து இதை தொடங்கவில்லை, இயற்கை உணவகம் அமைக்க முடிவு செய்த போது அந்த படத்தில் வரும் உணவகம் போன்ற அமைப்புடன் கூடிய ஒரு இடம் கிடைத்தது, பழமையான இடத்துக்கு பாரம்பரிய உணவு நன்றாக இருக்கும் என இடத்தை தேர்வு செய்தது மசாலா கபேயுடன் ஒத்து போய்விட்டது என்றார்.

Related Post