முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென நன்றி சொன்ன அதிமுக கூட்டணி கட்சி தலைவர்.. என்னவாம்?

post-img
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைக்கு செவி சாய்த்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பூவை ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார். புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அளவுக்கு அதிமுக தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். இச்சூழலில் அவர், திமுக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்.சி எஸ்.டி. மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான குடும்ப வருமான உச்ச வரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததை வரவேற்கிறோம். பட்டியலின மாணவர்களுக்கான இந்த அத்தியாவசிய கோரிக்கை குறித்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் எடுத்துரைத்திருந்தேன். பட்டியலின மாணவர்களின் நலனுக்காக எடுத்துரைத்த எத்தனையோ கோரிக்கைகளில் குடும்ப வருமானம் இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசு பட்டியலின மாணவர்களின் கல்விக்கான இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பூவை ஜெகன்மூர்த்தியின் இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி, பல முறை அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடர்வதை உறுதி செய்ததோடு, அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்க உள்ளோம். சொந்த தொகுதியான திருவள்ளூரை அழுத்தமாக கேட்போம். அந்தத் தொகுதியை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தார். அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த புரட்சி பாரதம் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் பூவை ஜெகன்மூர்த்தி அதிர்ச்சியடைந்தார். "ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு கடைசியாக ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி பரிசீலனை செய்து முடிவை அறிவிப்போம்" எனத் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் பூவை ஜெகன்மூர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர். 2016 சட்டசபை தேர்தலில் கூடுதல் வாய்ப்பு கொடுக்கிறோம் எனக் கூறி அவரை கூல் செய்தனர். இதையடுத்து லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

Related Post