திருப்பூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில், மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் திடீரென "கடவுளே அஜித்தே" என கோஷம் போட்டதால் மேடையில் இருந்த டிடிவி தினகரன் குழம்பிப் போனார்.
"கடவுளே அஜித்தே".. என்ற கோஷம் இப்போது செம பாப்புலர். தியேட்டர்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திடீரென'கடவுளே அஜித்தே...' எனக் கும்பலாகக் கூச்சலிட்டு மற்றவர்களை ஜெர்க் ஆக்கி வருகிறார்கள் இளைஞர்கள். அந்தவகையில், 'கடவுளே அஜித்தே' டிரெண்ட் தற்போது அரசியல் மேடைகளையும் தொற்றிக் கொண்டுள்ளது.
கடந்த மாதம், கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது, "கடவுளே அஜித்தே" என்ற கோஷத்தை மாணவர்கள் எழுப்பினர். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது தவெக தலைவர் விஜய் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே அஜித்தே" என்று முழக்கமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்தினார் விஜய்.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், அஜித்தே கடவுளே முழக்கங்கள் கேட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் சென்ற அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியிட வேண்டும் என வேண்டிக்கொண்டு, கையில் பேனரைப் பிடித்துக்கொண்டு "அஜித்தே கடவுளே" என்று கோஷமிட்டபடி சென்றது அண்மையில் வைரலானது.
இந்நிலையில், இன்று திருப்பூரில் தனது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களில் சிலர் "கடவுளே அஜித்தே" என கோஷம் போட்டதால் மேடையில் இருந்த டிடிவி தினகரன் மற்றும் நிர்வாகிகள் காரணம் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரை அழைத்து டிடிவி தினகரன் விசாரித்தார். அந்தப் பெண்ணும், மாணவர்களிடம், 'நீங்க என்ன சொல்றீங்க.. புரியவில்லை' என கூறினார். இந்த நிகழ்வால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage