கண்ணில் கலரிங்..நாக்கில் ஆபரேசன்! ஹூயுமன்ஸாடா நீங்க எல்லாம்! தொக்காய் சிக்கிய ஏலியன் ஹரிஹரன்! ஷாக்!

post-img
திருச்சி: திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து புகார்கள் பறந்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் காவல்துறையினர் கடந்த சில வருடங்களாகவே இளைஞர்களிடையே பேஷன் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. உடைகளில் காட்டி வந்த நாகரீகத்தை தற்போது தங்கள் உடல்களிலேயே டாட்டூ என்ற பெயரில் செய்து வருகின்றனர். கை கால்கள் மட்டுமல்லாமல், உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்வது என இருந்த நிலையில் தற்போதும் அது எல்லை மீறி போயிருக்கிறது. விபரீதமாக தொப்புளில் தோடு போட்டுக் கொள்வது, கண்களில் கலரிங் செய்வது என இளைஞர்கள் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் டாட்டூ சென்டர் என்ற பெயரில் நாக்கில் ஆபரேஷன் செய்த இருவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே "ஏலியன் டாட்டூ" என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார். உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை அவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார். மேலும், அவர் தன்னுடைய நாக்கை பிளவுப்படுத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுடைய நாக்கை பிளவுபடுத்தி கொண்டனர். மேலும், தொப்புளில் தோடு போடுவது, கண்களில் கலரிங் செய்வது என ஏலியன் போலவே தன்னையும் மாற்றிக் கொண்டார். இதனையடுத்து அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர போலீசார், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது அவர் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் ஹரிஹரனையும், அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் "சீல்" வைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இதற்கு முன்பாக மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும், அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பணிபுரிந்து வந்த ஜெயராமன் என்பவரையும் கைது செய்த போலீசார். ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இயற்கைக்கு மாறாக நாக்கு, கண் போன்றவற்றில் இது போன்ற விபரீத செயல்கள் செய்வது பேச்சு இழப்பு, பார்வை இழப்பு போன்ற விபரீத முடிவுகளுக்கு எடுத்துச் செல்லும். எனவே இது போன்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தமிழகம் முழுவதும் டாட்டூ என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்திருக்கும் நிலையில், காவல்துறையினரும் மருத்துவத்துறையினரும் இணைந்து இவற்றை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Related Post