துபாய் வேணாம்.. சவுதி அரேபியா, கத்தாரை அதிகம் விரும்பும் இந்திய பயணிகள்.. காரணம் என்ன தெரியுமா?

post-img
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் விசா விதிகளை கடுமையாக்கியிருப்பதால், துபாய் போன்ற பகுதிகளுக்கு செல்ல விண்ணப்பிக்கும் விசாக்களில் 62 சதவிகிதம் நிராகரிக்கப்படுவதாக விசா ஏற்பாட்டு நிறுவனமான அட்லீஸ் தெரிவித்துள்ளது. விசா கெடுபிடிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் புதிய சுற்றுலா விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்தியர்கள் பலருக்கும் விசா கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் சென்று துபாய் உள்ளிட்ட பகுதிகளில் வேலை தேடுவது, போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த விசா கொள்கையில் ஐக்கிய அரபு அமீரகம் கெடுபிடி காட்டுவதாக தெரிகிறது. புதிய விசா விதிகளின் படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல விரும்புவர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவுச் சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட்டுகளை வளைகுடா நாட்டின் குடியேற்றத் துறையின் போர்ட்டலில் சமர்ப்பிப்பது அவசியம். உறவினர் வீட்டில் தங்குவதாக இருந்தால் அவர்களின் வாடகை ஆவணம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் கூட பல விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசா கேட்டு இந்தியர்கள் விண்ணப்பித்தால் 1 முதல் 2 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது, 5 முதல் 6 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ரூ.50 ஆயிரம் வங்கி கையிருப்பு வைத்து இருக்க வேண்டும். பான் எண் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அத்தகைய நிபந்தனைகள் பூர்த்தி செய்தாலும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக விசா ஏற்பாடு செய்து கொடுக்கும் அட்லீஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது விசா நடைமுறை காலமும் 1.5 நாளில் இருந்து 2.7 நாளாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான ஆவணங்கள் பரிசீலனை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடுக்ள் காரணமாக, 48 சதவித சுற்றுலாப் பயணிகள் தங்கள் திட்டத்தை மாற்றியிருக்கிறார்களாம். சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்று அட்லீஸ தெரிவித்துள்ளது.

Related Post