ஓபிஎஸ் 2.0..மீண்டும் ’2’ கையெழுத்து? பரபரப்பில் பன்னீர்செல்வம்..பதற்றத்தில் பழனிசாமி! மதுரையில் மாஸ்

post-img

சென்னை: இரட்டை இலை தொடர்பாக முடிவெடுக்க ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மதுரை, கொங்கு மண்டலம் மற்றும் சென்னையில் அடுத்தடுத்து மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு இருக்கும் நிலையில் அதற்கு தயாராக இருக்குமாறு நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றுவதும் பின்னர் மறைந்து போவதுமாக இருக்கிறது. ஆனால் உட்கட்சி பிரச்சினை மட்டும் எப்போதும் ஓயாது போல..

அந்த அளவுக்கு பல்வேறு சிக்கல்களை அதிமுக எதிர் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரும்பு கோட்டை என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்ட அந்த கட்சி பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அதற்குப் பிறகு பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுத்தும் ஓபிஎஸ்-ஆல் மீண்டும் கட்சிக்குள் செல்ல முடியவில்லை. கட்சியை விட்டும் அவர் தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு அடுத்த இடத்தில் அதிகாரம் பொருந்திய நபராக இருந்த ஓபிஎஸ் தற்போது கட்சி வேட்டியை கூட அணியக்கூடாது என எடப்பாடி தரப்பு கூறி வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்து தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்.
அதே நேரத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவுகள் அதிகம். சட்டமன்றத் தேர்தல் தொடங்கி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அவரது தலைமையிலான அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இருக்கிறது. மேலும் சில சீனியர்கள் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற கள ஆய்வு குழு கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பல நிர்வாகிகள் தலைமையுடன் சண்டையிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் அதிமுகவில் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்க உற்சாகத்தில் இருக்கிறார் ஓபிஎஸ். காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு இரட்டை இலை ஒதுக்குவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகமடைந்திருக்கிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக எடப்பாடி தரப்பில் இருக்கும் மூத்த முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு கட்சிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை சித்திரை மாதம் நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு இருக்கிறார்.
தென்மாவட்டங்களில் நடப்பதால் நிச்சயம் தனது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என நம்புகிறது ஓபிஎஸ் தரப்பு. மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் தொண்டர்களை அழைத்து வரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இதில் சசிகலா, டிடிவி தினகரன் பாஜக கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டின் வெற்றியை பொறுத்து அதற்கடுத்ததாக கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு இடத்திலும், இறுதியாக சென்னையில் மாநாடு நடத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தற்போது இருந்தே செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கட்சியிலிருந்து ஒரம் கட்டப்பட்டாலும் தனக்கும் தொண்டர்கள் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஓபிஎஸ் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post