சிம்லா: அசைவம் சாப்பிடுபவர்கள் நல்ல மனிதர்களே கிடையாது, அவர்களால்தான் இமாச்சலில் நிலச்சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டது என அந்த மாநிலத்தில் மண்டியில் உள்ள ஐஐடி இயக்குநர் லட்சுமிதர் பெஹேரா தெரிவித்துள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை காரணமாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசமான மழையால் 752 சாலைகள் மூடப்பட்டன. சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிவன்கோயில் அப்படியே புதைந்துவிட்டது. இந்த கோயிலில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்த போது ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டன. மண் குவியல்களிலும் நிறைய பேர் சிக்கியதாக சொல்லப்படுகிறது. செக்லி பஞ்சாயத்தில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகிவிட்டனர். இப்படி இமாச்சலில் நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பில் சிக்கி இதுவரை 51 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் இமாச்சலில் மண்டியின் ஐஐடி இயக்குநர் லட்சுமிதர் பெஹோரா ஒரு விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று நடந்த விழாவில் பேசுகையில் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு மாணவர்கள் விழிக்க ஐஐடி இயக்குநரோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என கூறிய அவர் இனி அசைவம் சாப்பிட மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டார். மேலும் அவர் தொடர்கையில் நீங்கள் விலங்குகளை மாமிசத்திற்காக கொன்றால் இமாச்சலில் கணிசமான அழிவை சந்திக்கும்.
மாமிசத்திற்காக விலங்குகளை அழித்தல் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை போன்றது. இது போன்ற நிலச்சரிவுகளும் மேகவெடிப்புகளையும் நீங்கள் மீண்டும் பார்ப்பீர்கள். இந்த பாவத்தின் விளைவுதான் இந்த இயற்கை பேரழிவு. இவ்வாறு பெஹேரா கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் மாமிசம் சாப்பிடுவதால் இமாச்சலில் நிலச்சரிவு ஏற்படவில்லை. திட்டமிடப்படாத கட்டுமானம், காட்டை அழித்தல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால்தான் நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டது என ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை.. திடீரென கொட்டித்தீர்த்ததால் வாகன ஓட்டிகள் தவிப்பு