சியோல்: தென்கொரியாவில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். அங்கு அதிபர் யூனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் மீது அடுக்கடுக்காக பல புகார்கள் எழுந்துள்ளன. அதன்படி அதிபரின் மனைவி வைத்திருந்த ஒரே ஒரு ஹேண்ட் பேக் அவர் மீது மிகப் பெரிய ஊழல் புகார் வரக் காரணமாக இருந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தென்கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில மணி நேரத்தில் மிகப் பெரிய அரசியல் குழப்பமே ஏற்பட்டது. அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அவசர நிலையை அறிவித்தார்.
வடகொரியாவின் கம்யூனிச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், சில மணி நேரத்தில் எமர்ஜென்சி சட்டம் மீண்டும் வாபஸ் பெறப்பட்டது.
அதிபர் யூன்: சில மணி நேரம் மட்டுமே அங்கு எமர்ஜென்சி இருந்தாலும் கூட இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அதிபர் யூன் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில், எமர்ஜென்சி அறிவிப்பைத் தொடர்ந்து அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளது. பொதுமக்களிடையே அவரது செல்வாக்கைச் சரிக்கும் வகையில் பல சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளன. அதில் முக்கியமானது ஊழல் புகார் அவரது மனைவி வைத்திருந்த சாதாரண ஹேண்ட் பேக்கில் தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
அங்குள்ள மத போதகர் சோய் ஜே-யங்.. இவர் தனது வாட்ச்சில் கேமராவை மறைத்து வைத்து ஒரு வீடியோவை எடுத்து இருந்தார். அதில் அவர் 2,250 டாலர் (சுமார் ரூ.1.90 லட்சம்) மதிப்பிலான விலையுயர்ந்த டியோர் ஹேண்ட் பேக் ஒன்றை வாங்குகிறார். பின்னர் அதை அதிபர் யூனின் மனைவி கிம் கியோன் ஹீ நடத்தும் திட்டமிடல் நிறுவனத்திற்கு எடுத்து வருகிறார். மேலும், அந்த காஸ்ட்லி ஹேண்ட் பேக்கையும் அவருக்குக் கொடுக்கிறார்.
ஹேண்ட் பேக்: அந்த ஹேண்ட் பேக்கை வாங்கும் அதிபரின் மனைவி கிம், "ஏன் இதைத் தொடர்ந்து கொண்டு வருகிறார்கள்.. இது போன்ற விலையுயர்ந்த ஹேண்ட் பேக்கை வாங்கவே தேவையில்லை போல" என்று சொல்வது போல இருக்கிறது. இந்த சம்பவம் 2022இல் நடந்த நிலையில், அப்போது அது பெரியளவில் சர்ச்சையாகவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களில் தான் இது அங்கு மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது.
தென் கொரிய அதிபர் யூன் இதுபோலத் தான் காஸ்ட்லி பொருட்களை லஞ்சமாக வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் புகார்கள் கிளம்பின. இது அதிபர் யூனின் நற்பெயரைக் கெடுப்பதாக அமைந்தது. தங்கள் மீதான புகார்களை மறுத்துள்ள அதிபர் யூன்- கிம் தம்பதி தங்களை இழிவுபடுத்தவே திட்டமிட்டு இதுபோல சூழ்ச்சி செய்துள்ளதாக விளக்கமளித்தனர்.
விசாரணை: கடந்த ஜூலை மாதம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் அதிபரின் மனைவி கிம்மிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் கிம் தவறு எதுவும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகள் இதில் ஊழல் நடந்துள்ளதாகவே தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். மேலும், இந்த விவகாரத்தில் சுதந்திர விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி தான் ஒரே ஒரு ஹேண்ட் பேக்கால் அவர் இன்னும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage