சென்னை: திமுகவின் வரலாறு தெரியாமல் நேற்று முளைத்தவன் எல்லாம் இன்று சவால் விடுகிறான். ஆனால் இந்த கட்சியை எதிர்த்தவன், எதிர்க்க நினைப்பவன் மண்ணோடு மண்ணாகி போயிருக்கிறான் என்பது தான் வரலாறு. மக்களுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. தொழில் ரீதியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகவே கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை திமுகவின் ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதாவது:- திமுகவின் வரலாறு தெரியாமல் நேற்று முளைத்தவன் எல்லாம் இன்று சவால் விடுகிறான். ஆனால் இந்த கட்சியை எதிர்த்தவன், எதிர்க்க நினைப்பவன் மண்ணோடு மண்ணாகி போயிருக்கிறான் என்பது வரலாறு..
நான் சாபமிடவில்லை. வரலாறை சொல்கிறேன். புது துடைப்பம் கொஞ்சம் வேகமாக பெருக்கும் என்று சொல்வார்கள். துடைப்பம் கொஞ்ச நாளில் தேய்ந்துவிடும். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் செய்து இருப்பதை யாரும் மறந்துவிட முடியாது. நேற்று ஒருவர் அதிகமாக பேசுகிறார். மன்னராட்சி என்று எல்லாம் பேசுகிறார்.
இது குடியரசு நாடு. தேர்தலில் நின்று 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டு பொட்டு ஒருவரை தேர்வு செய்து.. அப்படி மெஜாரிட்டியாக வரும் கட்சிதான் நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் சட்டம்.. இது கூட தெரியாத சில முட்டாள்கள் இருகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தான் முதல்வர் ஸ்டாலினும் சரி.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சரி..
மக்கள் மத்தியில் சென்று வாக்குகளை பெற்று மெஜாரிட்டி அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இன்று அவர்களுக்கு இருக்கிற வயிற்றெறிச்சல் என்னவென்றால் திராவிடம் என்ற சொல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது... இதை தாங்கி கொள்ள முடியாத ஒரு கூட்டம் உள்ளது.
சினிமாவில் உள்ள தொழில் தகராறு காரணமாக கட்சி ஆரம்பித்தால் கட்சி உருப்படுமா? வெளிப்படையாக சொல்கிறேன். சினிமா ஒரு குறிப்பிட்ட சிலரின் கையில் போயிருக்கிறது என பேசியிருக்கிறார்கள். மக்களுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. தொழில் ரீதியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்" என்றார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இறுமாப்புடன் சொல்வோம் என சொல்லும் திமுகவை மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று பேசியிருந்தார்.
அதேபோல விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "சினிமாவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மன்னர் பரம்பரையை உருவாக்க இனி ஒருபோதும் தமிழகம் இடம் தராது. மன்னர் பரம்பரையை ஒழிப்பதற்கு இன்று அம்பேத்கர் சிந்தனைகள் நமக்கு தேவைப்படுகிறது. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக்கப்படக்கூடாது" என்று பேசினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage