சென்னையில் அதிகாலை முதலே டமால் டூமீல்.. கொட்டித்தீர்த்த கனமழை..

post-img

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. கனமழையால் இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஏமாற்றினாலும் நவம்பர் மாதத்தில் தனது வேகத்தை ஆரம்பித்து விட்டது. கடந்த 3 நாட்களாகவே சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் காலை முதலே பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். எதிர்பாராமல் மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மெட்ரோ ரயில் பாலத்திற்குக் கீழே ஒதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.


சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நள்ளிரவு நேரத்தில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னை ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், கே கே நகர், ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.


இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை கொட்டியது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 8.30 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Related Post