பழம்பெரும் இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்! இந்திய சினிமாவில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தியவர்!

post-img
மும்பை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் இன்று காலமானார். இந்திய சினிமா உலகில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திய ஷியாம் பெனகல் தனது 90 வயதில் இன்று மறைந்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே விருதுகளை பெற்றவர் ஷியாம் பெனகல். ஹைதராபாத்தில் பிறந்த ஷியாம் பெனகல், மும்பைக்குச் சென்று விளம்பரப் படங்களில் பணியாற்றினார். 70களில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, இந்திய சினிமா உலகையே பிரமிக்க வைக்கும் படங்களை எடுத்தவர் ஷியாம் பெனகல். சமூக பிரச்சனைகள், சாதி அமைப்புகளை நோக்கி கூர்மையான விமர்சனப் பார்வையோடு அவர் எடுத்த படங்கள் பெரியளவில் பேசப்பட்டன. அங்கூர், சமர், நிஷாந்த், சர்தாரி பேகம், ஜூபைதர் மற்றும் மந்தன் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கினார் ஷியாம் பெனகல். 1996 ஆம் ஆண்டு சியாம் பெனகல், " தி மேக்கிங் ஆப் த மகாத்மா' எனும் படத்தை இயக்கினார். இந்தப் படம், காந்தியை மகாத்மா ஆக்கிய தென்னாப்பிரிக்க வாழ்க்கை பற்றியது. 2014 ஆம் ஆண்டில் காந்தியை மையமாகக் கொண்டு 'சாம்பிதான்’ எனும் தொடரை இயக்கினார் ஷியாம் பெனகல். ஏராளமான சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார் ஷியாம் பெனகல். இவரது கலைப்பணிகளை கௌரவிக்கும் விதமாக பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் மத்திய அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சினிமா துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார் ஷியாம் பெனகல். இயக்குநர் ஷியாம்‌ பெனகல் அண்மையில் தான் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி, தனது 90 வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்களுடன் கொண்டாடினார் ஷியாம் பெனகல். இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் அவர் காலமாகியுள்ளார். ஷியாம் பெனகல், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் இவர் இன்று மாலை அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Post