டெல்லி: நமது நாட்டில் கிரிக்கெட் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கூட இங்குப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையே முறைகேடு வழக்கு ஒன்றில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டிற்கு நமது நாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் குறித்த செய்திகள் எப்போதுமே முக்கியமானதாகவே இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை முறைகேடு வழக்கில் கைதாகி இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு:
கடந்த 2013-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் நகரத்தில் உள்ள ஜோல்கேடா என்ற கிராமத்தில் உள்ள வங்கியில் முறைகேடு நடந்துள்ளது. அங்குள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி கிளையில் ரூ.1.25 கோடி அளவுக்கு மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். சுமார் 11 ஆண்டுகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில், இப்போது இதில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இப்போது தீர்ப்பை அறிவித்தது. மேலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூளையாகச் செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
நமன் ஓஜாவின் தந்தை:
அதேபோல இந்த முறைகேடு நடந்த போது முன்னாள் கிரிக்கெட் வீரரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா அந்த வங்கியில் உதவி மேலாளராக இருந்தார். அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ன நடந்தது:
இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அபிஷேக் ரத்னம், வங்கி அதிகாரிகளின் பாஸ்வோர்ட்டை பயன்படுத்தி மோசடி செய்தது கண்டறியப்பட்டது. அப்போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவும் அந்த வங்கியில் பணிபுரிந்த நிலையில், விசாரணையில் அவரது பெயர் அடிப்பட்ட போதே அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அபிஷேக் ரத்னம் மற்றும் வினய் ஓஜா ஆகியோர் இணைந்து முகவர்கள் மூலம் போலிக் கணக்கு தொடங்கி ரூ.1.25 கோடி மோசடி செய்ததாக வழக்கறிஞர் விஷால் கோடலே குறிப்பிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு:
வழக்கின் விசாரணையின் போதே வங்கியில் கேஷியராக பணியாற்றிய தினாநாத் ரத்தோர் உயிரிழந்தார். மேலும், வங்கியில் பயிற்சி கிளை மேலாளர் நிலேஷ் சத்ரோல் என்பவரது ஐடி மற்றும் பாஸ்வோர்ட் தான் இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதாவது மொத்தம் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.