டெல்லி: நரேந்திர மோடி அரசு கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாகக் காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்தது. குறிப்பாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக அப்போது மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் பேசியது பலரது கவனத்தையும் பெற்றது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு 2016ம் ஆண்டு கொண்டு வந்த நிலையில், அதைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பாக மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாகப் பேசும் போது, மக்கள் சந்தித்த பிரச்சினைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தத் திட்டம் மிக மோசமாகச் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
இது தொடர்பாக மன்மோகன் சிங் கடந்த 2016ம் ஆண்டு நவ. 24ம் தேதி ராஜ்யசபாவில் பேசியிருந்தார். அதில் மன்மோகன் சிங், "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டுள்ளதால் எழும் சில பிரச்சனைகள் குறித்து நான் பேசுகிறேன். கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், போலி நோட்டுகளைத் தடுக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி செல்வதைக் கட்டுப்படுத்தவும் இதுவே வழி என்று பிரதமர் சொல்கிறார்.
அவர் சொல்லும் நோக்கங்கள் சரியானது தான். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மிகப் பெரிய நிர்வாக தவறு நடந்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் குறுகிய காலத்தில் பிரச்சினை வந்தாலும் நாட்டின் நீண்ட கால நலனுக்காக இதைப் பொறுத்துக் கொள்ளுங்கள் எனச் சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஜான் கெய்ன்ஸ் ஒருமுறை கூறிய நீண்ட கால நோக்கில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம் என்று சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்..
பிரதமர் ஒரே இரவில் இதை நாட்டின் மீது திணித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் கடைசியாக என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது.
இதை அறிவித்த போது 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். 50 நாட்கள் என்பது ஒரு குறுகிய காலம்தான் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஏழைகள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு 50 நாட்கள் இந்த சித்திரவதை கூட பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சுமார் 60 முதல் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இது இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது நமது கரன்சி மற்றும் வங்கி முறையின் மீது நமது மக்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்து, சிதைத்துவிடும்.
மக்கள் தங்கள் வங்கியில் டெபாசிட் செய்த தொகையை எடுக்க முடியாத சூழல் உலகின் எதாவது ஒரு நாட்டில் இருக்கிறதா என்பதை . நாட்டு மக்களின் நலன் என்ற பெயரில் இப்போது நடந்ததைக் கண்டிக்க இது ஒன்றே போதும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் நம் நாட்டில் விவசாய வளர்ச்சியைப் பாதிக்கும். சிறு தொழில்துறையைப் பாதிக்கும், அமைப்புசாரா துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதை நான் மேலும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் இதன் காரணமாகத் தேசிய வருமானம், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுமார் 2 சதவீதம் குறையும் என்று நினைக்கிறேன்.
நான் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. எனவே, இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்தும், சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தைத் தடுப்பது குறித்தும் சில ஆக்கப்பூர்வமான தீர்வுகளைப் பிரதமர் முன்வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மக்கள் இப்படி தான் பணத்தை எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதிகளை வங்கி அமைப்புகள் அறிவிப்பது சரியான போக்கு இல்லை.. ரிசர்வ் வங்கி மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது வருத்தமளிப்பதாக இருக்கிறது. இருப்பினும், அந்த விமர்சனங்கள் முற்றிலும் நியாயமானது என்றே நான் நினைக்கிறேன்.
இதற்கு மேல் நான் அதிகம் பேச விரும்பவில்லை. பெரும்பாலான மக்கள் இதனால் துயரத்தைச் சந்தித்து வரும் நிலையில், அதற்கான தீர்வை கண்டறியுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டில் 90 சதவீதம் பேர் முறைசாரா துறையில் வேலை செய்கிறார்கள்.. 55 சதவீத விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர்.. கிராமப்புறங்களில் அதிக அளவில் மக்களுக்குச் சேவையாற்றும் கூட்டுறவு வங்கி அமைப்பு செயல்படாமல் முடங்கியுள்ளன. மேலும், ரொக்கத்தைக் கையாளுவதில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அனைத்து நடவடிக்கைகளையும் வைத்துப் பார்க்கும் போது, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் ஒரு மாபெரும் நிர்வாக தோல்வி.. இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை (organised loot), சாமானிய மக்களை சட்டப்பூர்வமாகக் கொள்ளையடிக்கும் (legalised plunder) வழி என்றே எனக்குத் தோன்றுகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.