மறக்க முடியுமா? அடித்தட்டு மக்கள் வரை பயன்பெற மன்மோகன் சிங் அரசு செயல்படுத்திய முத்தான 10 திட்டங்கள்

post-img
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 வயதில் மறைந்தார். 10 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த மன்மோகன் சிங், தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனளிக்கும் எண்ணற்ற திட்டங்களை ஆர்ப்பாட்டமின்றிச் செய்தவர். கடைக்கோடி மக்கள் வரை பொருளாதார தன்னிறைவு பெறுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார் மன்மோகன் சிங். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை பிரதமராகவும், அதற்கு முன்னர் மத்திய நிதி அமைச்சராகவும் இருந்தபோது, நாட்டின் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் உள்படப் பல முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, இந்திய பொருளாதாரத்தைச் செதுக்கிய சிற்பியாக அவர் கருதப்படுகிறார். 2006 - 2007ல் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ் இந்தியா அதன் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதமான 10.08% வளர்ச்சி விகிதத்தை எட்டி உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கிக் கட்டி எழுப்பினார் மன்மோகன் சிங். அவரது 10 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மிக முக்கியமான 10 திட்டங்களைப் பார்க்கலாம். 1.. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2005இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லாத் திட்டத்தைப் போக்குகிற வகையில், 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) கொண்டுவரப்பட்டது. 2. இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், தனித்தனி அடையாள எண் வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டது. 3. 2005 இல், மன்மோகன் சிங் அரசு அன்று வரை இருந்த சிக்கலான விற்பனை வரிக்குப் பதிலாக வாட் (VAT) வரியை அறிமுகப்படுத்தியது. 4. மன்மோகன் சிங் தலைமையின் கீழ், சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005 இயற்றப்பட்டு , 23 ஜூன் 2005 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) விதிகள் 2006 உடன் 10 பிப்ரவரி 2006 அன்று நடைமுறைக்கு வந்தது. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் இயற்றப்பட்டது. 5. பிரதமர் மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் கையெழுத்தானது. 6. வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக இந்திரா காந்தி அவாஸ் யோஜனா திட்டம், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 7. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது. 8. வங்கிகளில் கல்விக்கடன் என்பது எவரும் எளிதில் பெற முடியாத, அரிதாக இருந்த காலத்தில், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கல்விக்கடன் திட்டத்தை பரவலாக்கியது. ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்விக்கடன் பெற்று தொழில் கல்வி பயின்றனர். 9. மன்மோகன் சிங்கின் ஆட்சியில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. 10. மன்மோகன் சிங் ஆட்சியில் அமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்தில், கிராமங்கள் அருகிலுள்ள நகரங்களோடு இணைக்கப்பட்டு, அந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post