மன்மோகன் சிங் மறைவு! நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

post-img
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டிருக்கிறார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்றிரவு அவசர சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார். கடந்த 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் மேற்கு பஞ்சாப்பில் மன்மோகன் சிங் பிறந்தார். இன்று இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1971ம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக இந்திய அரசின் பணியை தொடங்கினார் மன்மோகன். அதன் பின்னர் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்ட கமிஷனின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வந்தார். இதனையடுத்து வி.பி.நரசிம்மராவ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மன்மோகனுக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1991-1996 காலத்தில் மன்மோகன் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இந்த காலத்தில்தான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகிய கொள்கைகளை அவர் அமல்படுத்தினார். இதனையடுத்து கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது மன்மோகன் பிரதமராக தேர்வாகினார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது. தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார். நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார். பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்" என்று இரங்கல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post