கன்னியாகுமரி: பார்க்க சாதாரணமான பாறை போன்று இருக்கும் இது.. சாதாரணமானது அல்ல.. இதன் மதிப்பு பல கோடியாகும்.. உலகின் பல நாடுகளில் இதற்கு மவுசு ஜாஸ்தி. இதன் பெயர் திமிங்கல வாந்தி.. அதாவது திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றை கடத்தி வந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.
திமிங்கல வாந்தி என்றால் என்ன: எண்ணெய்த் திமிங்கிலம் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் திடக்கழிவுப் பொருள் தான் திமிங்கல வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) என்று அழைக்கப்படுகிறது. இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். பொதுவாக எண்ணைத் திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கமாகும். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க இயலாது.
எனவே அந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக் கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகும். இதனை திமிங்கல வாந்தி என்று அழைப்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் அம்பர் கிரீஸ் என்று அழைப்பார்கள்.
திமிங்கல வாந்தி நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர் கிரீசை சிலசமயம் எண்ணெய்த் திமிங்கிலங்கள் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றி வருகிறது. சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் அம்பர் கிரீஸை வெளியேற்றுகின்றன. திமிங்கல வாந்தி எனும் அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு ஏற்றார் போல் அதிக விலை கிடைக்கும்.
சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்க அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். திமிங்கல வாந்தியிலிருந்து (அம்பெர்கிரிஸ்) மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கல வாந்தியிலிருந்து தயாரிக்கப்படும் ஹப்பே நிஷாத் எனும் மருந்து விந்தணுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகப் பயன்படுவதாக கூறப்படுகிறது.
திமிங்கில வாந்தியான அம்பெர்கிரீஸ் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. இந்தியாவில் குஜராத் மற்றும் ஓடிசாவின் கடற்கரை பகுதியில் எப்பேதாவது கிடைக்கும். கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் மிக மிக அரிதாகவே கிடைக்கும். அரபு நாடுகளில் திமிங்கல வாந்தி எனும் அம்பரீசுக்கு பெரும் தேவை இருப்பதால் அதனை கோடிகளை கொட்டி வாங்குகிறார்கள். எனவே, அதன் விலை மிக அதிகம்.
தங்கத்தின் விலையை விட திமிங்கில வாந்தியின் விலை அதிகமாக இருப்பதால் இது 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கிறார்கள்.. பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வரை போகிறது. இந்நிலையில் எண்ணெய்த் திமிங்கிலத்தின் எலும்புகள், எண்ணெய் மற்றும் வாந்தி ஆகியவற்றுக்காக அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இதை தடுக்க திமிங்கில வாந்தி ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதை சட்டவிரோதமாக கடத்தினால் கண்டிப்பாக ஜெயில் தான்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் லாயம் விலக்கில் இருந்து மாதவலாயம் செல்லும் வழியில் ஸ்ரீகுமார் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். பைக்கை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்றார்கள். போலீசார் துரத்துவதை அறிந்த அவர்கள் தங்களிடம் இருந்த சாக்குப்பையை தூக்கி வீசிவிட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்கள்.
இதையடுத்து போலீசார் அவர்கள் தூக்கி வீசிய சாக்குப்பையை திறந்து பார்த்தனர். அதில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் இருந்தன. உடனே அதை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அந்த உமிழ்நீர் கட்டிகள் 5 கிலோ 690 கிராம் இருந்தது. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்பபடுகிறது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒப்படைக்கப்பட்டன. இது சம்பந்தமாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக்கில் உமிழ்நீர் கட்டியை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.