மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. பதான் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் படம் ஜவான் என்பதால் அவருடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன் அன்டச் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த செயலியானது இளைஞர்களை தவறான வழி நடத்துகிறது என கூறியதால் இந்த போராட்டம் நடந்தது.
இது குறித்து அன்டச் இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் கிருஷ்சந்திரா அடல் தெரிவித்ததாவது: புதிய தலைமுறையினர் ஆன்லைன் ரம்மியை பயன்படுத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் யாராவது ஈடுபட்டாலே போலீஸார் அவர்களை கைது செய்கிறார்கள். ஆனால் பாலிவுட் நட்சத்திரங்கள் ஆன்லைன் ரம்மி செயலியை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது தவறான முன்னுதாரணம் என நடிகர்களுக்கே தெரியும். ஆனாலும் பணத்திற்காக இந்த செயலிகளை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். நாம் நம் கைகாசை போட்டு சினிமாவுக்கு போய் இவர்களுக்கு ஆதரவு தருகிறோம். ஆனால் இவர்களோ சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்துகிறார்கள். இவ்வாறு அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது போல் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த சரத்குமாரிடம் கேட்ட போது, நான் எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலே யாரும் கேட்பதில்லை. அப்படியிருக்கும் போது நான் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தால் எல்லோரும் போய் சூதாடுவார்களா என கோபமாக கேட்டிருந்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage