சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 60 கிராம மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிசம்பர் 12) மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 4 மணியிலிருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக, காலையில் பணிகளுக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 1,290 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது, அது 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு வடிநிலத்தில் உள்ள 336 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதால், சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 60 கிராம மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையைப் பொறுத்து படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.