கோவை ஈஷா அருகே நடக்கப் போகும் அட்டகாசமான மாற்றம்.. 33 கோடியில் சூப்பா் திட்டம்

post-img

கோவை: கோவை மாவட்டம், காளம்பாளையம் முதல் மாதம்பட்டி வரையிலான சிறுவாணி புறநகர்ச் சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசு சார்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ. 33.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் குளு குளு காலநிலையும், மரியாதை மிகுந்த கொங்கு தமிழும் தான். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கோவையின் மற்றொரு சிறப்பு சுவை மிகுந்த சிறுவாணி தண்ணீர். கோவை மாவட்டத்துக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.

கோவை நகர்ப் பகுதியில் இருந்து சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இயற்கையின் அழகு சூழ்ந்த இப்பகுதியில், ஆவின் பால் பண்ணை, கோவை கொண்டாட்டம், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், காருண்யா பல்கலைக்கழகம், ஈஷா யோக மையம் அமைந்துள்ளது.
அதனை தாண்டிச் சென்றால் இயற்கை அளித்த கொடையான கோவை குற்றாலம், ஆறுகள், தடுப்பணைகள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. கோவை புறநகர்ப் பகுதியான சிறுவாணி சாலையில் சபரிமலை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வெளிமாநில வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.
ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சிறுவாணி சாலையைப் பயன்படுத்துவதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையை விரிவாக்கம் செய்தால் விபத்துகள் குறைக்கப்படும் என்பதால் சிறுவாணி புறவழிச் சாலையை விரிவுபடுத்த வேண்டும என மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், காளம்பாளையம் முதல் மாதம்பட்டி மேற்கு புறவழிச் சாலை வரை 5 கிலோ மீட்டர் சாலையின் நடுவே சென்டர் மீடியன எனும் சாலைத் தடுப்புகள் அமைத்து, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசு சார்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ. 33.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுவாணி புறநகர்ச் சாலை விரிவாக்க பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதற்கு முன்பாக இந்த சாலையின் இருபுறமும் தலா 7.5 மீட்டர் தார் சாலையும், 1.5 மீட்டர் மண் பாதையும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல, விரிவாக்கம் செய் யப்படக்கூடிய பகுதிகளில் உள்ள தரை பாலங்களை 14 மீட்டர் அகலப்படுத்தும் பணியும் நடைபெறவுள்ளது.
காளம்பாளையம் முதல் மாதம்பட்டி வரையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால் சிறுவாணி புறநகர்ச் சாலையில் ஏற்பட்டு வந்த விபத்துகள் குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், உள்ளூர் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் வெளியூர் வாகன ஓட்டிகளும் வெள்ளிங்கிரி, ஈஷா, கோவை குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு எளிமையாகச் சென்று வர முடியும்.

இதேபோல, பேரூர் செட்டிப்பாளையம் கோவைப்புதூர் பிரிவில் இருந்து பச்சாபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post