சென்னை: செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று உலகளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்திருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்? அவரது தாய் பட்ட கஷ்டங்கள் என்ன? என்பதை விளக்கியுள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆதிஷா.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர், "11 ஆண்டுகளுக்கு முன்பு பிரக்ஞானந்தாவை பேட்டி கண்டேன். அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு. அதில் வென்ற ஏழெட்டு வயதேயான குட்டி பையனாக நெற்றி நிறைய விபூதியோடு குறும்புத்தனமாகப் பேசினான்.
பேட்டி முழுக்க அவனுடைய அம்மாதான் அதிகமும் பேசி இருப்பார். அப்போதே மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்ட கால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன. அதை அந்தப் பேட்டியிலும் சொல்லி இருப்பார்.
இந்தப் படத்திலும் அந்த அம்மாவின் ஆர்வத்தைப் பார்க்க முடியும். தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்தவரின் தொடக்ககாலம் அது. அவனுடைய அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு முழுவதுமாக அவனை சதுரங்கத்துக்கு ஒப்புகொடுத்தார்.
மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த பையனை மேலும் மேலும் முன்னேற்ற ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் ஸ்பான்சருக்காக அலைந்து திரிந்த அந்த அன்னையின் அலைச்சலைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனை அலைச்சல்களிலும் ஒருநாளும் மனதை தளரவிடாது விடாப்பிடியாக இருந்தார்.
எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருந்தார். இன்று மகன் மிக பெரிய உயரத்தை எட்டி இருக்கிறான். இரண்டாமிடம் என்றாலும் பிரக்யானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரக்ஞானந்தாவுக்கு தற்போது 18 வயதாகிறது. தன்னையே அர்ப்பணித்து பிரல்ஞாந்தா என்ற பெயரை உலகம் முழுவதும் உச்சரிக்க வைத்த அவரது தாயின் முகத்தை மட்டுமே பலர் நினைவில் வைத்திருப்பார்கள். நாகலட்சுமி என்ற அவரது பெயரை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பொருட்களை அழகாக காட்டும் விளக்கைபோல் திரைமறைவில் நாகலட்சுமியின் உழைப்பும் தியாகமும் அளப்பறியது.
அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனையே தண்ணீர் குடிக்க வைத்து 2 நாட்கள் போட்டியை சமன் செய்து டை பிரேக்கர் வரை கொண்டு சென்ற 18 வயதேயான பிரக்ஞானந்தா தமிழ்நாடு திரும்பும்போது அவருக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு மகத்தானது.
உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது, அதை ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருக்கும் அவரது தாய் நாகலட்சுமியின் படமும் அதில் பதிவாகி, அனைவரையும் ரசிக்க வைத்தது. சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒவ்வொரு தாயும் தன் மகனை எப்படி காண வேண்டும் என்று நினைப்பாரோ, அதை அந்த படத்தில் நாகலட்சுமி பிரதிபளித்து இருப்பார்.
இந்த சிறுவயதிலேயே இத்தகைய உச்சத்தை தொட்ட தமிழ்நாட்டின் பொக்கிஷமான பிரக்ஞானந்தா, தனது தாய் நாகலட்சுமியின் கனவை நிறைவேற்றும் வகையிலும், ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையிலும் அடுத்த முறை உலகக்கோப்பையை வென்று தங்க மகனாக தமிழ்நாடு திரும்புவார்.