சென்னை: நடிகர் பிரபுதேவா தனது மூன்றாவது திருமண வாழ்க்கையைப் பற்றியும் அது தனக்கு அளித்து புதுவிதமான அனுபவம் பற்றியும் பல சுவாரஸ்யமான விசயங்களை முதன்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் நடனபுயல் என்று பெயர் எடுத்தவர் பிரபுதேவா. அவர் வந்த பிறகுதான் சினிமா நடன உலகம் வேறுமாதிரியாக மாறியது. இன்றைய இளைஞர்களின் பாஷையில் சொன்னால், 90களிலேயே வேற லெவல் இவர். நடன இயக்குநராக இருந்த பிரபுதேவா இந்து படத்தின் மூலம் நாயகன் அளவுக்கு வளர்ந்தார். அடுத்து காதலன், மின்சார கனவு ஆகிய படங்கள்: அவரை பெரிய நடிகராக மாற்றின. அதே நடனத்துறையிலிருந்த ரமலத்தை 1995இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்தத் தம்பதி 2011 பிரிந்தது.
அப்போது அவர் நயன்தாராவுடன் காதலிலிருந்தார். அது சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பிரபு என தன் கையில் நயன் பச்சை குத்திக் கொண்ட விவகாரம் பெரிய அளவில் செய்தியானது.பின்னர் சில காரணங்களால் 2012இல் பிரபுதேவாவை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டதாக நயன்தாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனையடுத்து பல ஆண்டுகளாக அவர் முரட்டு சிங்கிள் ஆகவே இருந்து வந்த பிரபுதேவா கடந்த 2020இல் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவர் பாலிவுட் பக்கம் போன பிறகு தமிழ்நாட்டில் அதிகம் தலைவைக்காததால் அவரைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகவில்லை.
இந்நிலையில்தான் பிரபு தேவா இப்போது ஒரு பிரபல யூடியூபருக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல விசயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், "எனக்குத் திரும்பக் கல்யாணமாகும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதுதான் உண்மை. கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடந்தது. எனக்கு உள்ளங்கையில் தொடர்ந்து ஒருவிதமான வலி இருந்துகொண்டே இருந்தது. அதற்குச் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் வலி அதிகமான போது, ஒரு பிசியோதெரபி வந்தார். அவர்தான் ஹிமானி சிங். மும்பை பக்கத்தில் உள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். அவரது அறிமுகம் கல்யாணம் வரை சென்றது. 2020 எங்கள் மேரேஜ் நடந்தது.
இப்போது நினைத்துப் பார்த்தால் கூட எனக்கே வியப்பாக இருக்கிறது. வாழ்க்கையில் எனக்கு மறுபடியும் ஒரு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை சத்தியமாக இல்லை. ஆனால், நடந்தது. என் கை வலியைச் சரி செய்ய வந்தார் அவர். என் வாழ்க்கையில் ஒருவராக மாறிவிட்டர். ஆனால், இன்னும் அந்தக் கைவலி இருக்கிறது. முழுமையாகக் குணமாகவில்லை. அவர் என்னை திருமணம் புரிந்த பிறகு பிசியோதெரபி வேலையை விட்டுவிட்டார். நான் கூட அவரிடம், 'நீ பிசியோதெரபியாக இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்' என்று கேட்டுப்பார்த்தேன். அவர் மீண்டு அதைத் தொடரவில்லை" என்று பேசி இருக்கும் பிரபுதேவா தனக்கு புதிய மகள் பிறந்துள்ள அனுபவத்தைப் பற்றியும் மிக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் , "மகளுக்கு ஒன்றரை வயது. பெயர் சியா. அப்படி என்றால் ஒளி என்று அர்த்தம். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அது ஒரு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை பற்றி இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என் குடும்பத்தில் பெண் பிள்ளையே இல்லை. இதுவரை எல்லோரும் ஆண்கள்தான்.
எனக்கு முதல் கல்யாணமாகி, அதன் பிரிந்து அடுத்து என்ன நடந்தது என எல்லோருக்குமே தெரிந்ததுதான். அதற்குப் பின்னர் இப்போது ஒரு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. என்ன லைஃப் சார் இது? 51 வயதில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாவது ஒரு புதுமையான அனுபவம். அவளுக்கு 15 வயதாகும் போது எனக்கு 65 வயதாகி இருக்கும். தினந்தோறும் என் மகளுடன் விளையாடுகிறேன். அவளைக் கொஞ்சுவது வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. நான் இளமையாக இருக்கிறேன். என் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் 50 வயதில் ஒரு குழந்தைப் பெற்றுப் பாருங்கள். அது புதிய உலகமாக இருக்கிறது என்று சொன்னேன்.
அவர்கள் காமெடி பண்ணாதே என்றார்கள். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், என் மகள் என்னை 25 வயது இளைஞராக மாற்றி இருக்கிறாள். எனக்கு வயதாக வயதாக நான் இன்னும் ஜாலியாக இருப்பேன். அவளைப் பார்த்துக் கொண்டு அவள் வளரவளர நான் உற்சாகமாக இருப்பேன். வாழ்க்கையில் 40 வயதில் வாழ்க்கை போர் அடிக்க தொடங்கும். அது எனக்கு இல்லை. இந்த 50 வயதில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். முன்பே எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒருவர் ரிஷி. மற்றொருவன் ஆதித். அவர்களும் எனக்கு நெருக்கம்தான். இப்போது குட்டிப் பாப்பா துள்ளித் துள்ளி விளையாடி வருவதைப் பார்க்கவே வேறு மாதிரியான அனுபவமாக இருக்கிறது" என்று பேசி இருக்கிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage