திருச்சி: சண்டிகரில் நடைபெற்ற இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மாநாட்டில் பங்கேற்றிருந்த திருச்சி எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்றும், அது கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி எஸ்பிக்கும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கெனவே உரசல்கள் இருந்து வந்திருக்கின்றன. தன்னுடைய குடும்பத்தை நாம் தமிழர் கட்சியினர் சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்புகின்றனர் என்று வருண்குமார் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நாம் தமிழர் நிர்வாகிகள், தங்களை பற்றிதான் அவதூறு பரப்புவதாக பதில் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இந்த பஞ்சாயத்தை அடுத்து வருண்குமார் சோஷியல் மீடியாக்களிலிருந்து விலகிக்கொண்டார்.
இப்படி இருக்கையில்தான் சண்டிகரில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மாநாட்டில் வருண்குமார் பங்கேற்றிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்றிருந்த அவர், சைபர் கிரைம் குறித்து உரையாற்றியிருந்தார். அதில், "நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். அது கண்காணிக்கப்பட வேண்டும். இதனால் நானும் எனது குடும்படும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது இணைய குற்றங்களை செய்யும் கூலிப்படைகளை கண்காணிக்க 14 சி எனும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவரது பேச்சு அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
வருண்குமாரையும், அவரது மனைவி புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டேவையும் தாக்கி, ஆபாசமாக சித்தரித்து சிலர் எழுதியிருந்தது சில நாட்களுக்கு முன்னர் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்படி இருக்கையில் வருண்குமார் தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடங்கி வைத்திருந்தனர்.
பிரிவினை அமைப்புகளை ஏற்கெனவே மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது நாம் தமிழர் குறித்து இளம் ஐபிஎஸ் அதிகாரி குற்றம்சாட்டியிருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு நிச்சயம் சென்றிருக்கும் என்றும், எனவே சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage