சட்டென டோனை மாற்றிய புதின்.. உக்ரைன் போரில் இதை யாரும் எதிர்பார்க்கல.. அப்போ அடுத்து என்ன நடக்கும்?

post-img
மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த சில காலமாகவே மீண்டும் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார். இத்தனை காலம் பேச்சுவார்த்தைக்கே நிபந்தனை விதித்து வந்த புதின், இப்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு முதலே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இடையில் சில காலம் இந்த மோதலில் அமைதியான சூழல் திரும்பியது. ஆனால், இப்போது அங்கே மீண்டும் போர் பதற்றம் வெடித்துவிட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது. அதாவது இத்தனை காலம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குக் கூட அவர் பல நிபந்தனைகளை விதித்து வந்தார். ஆனால், இப்போது எந்தவொரு முன் நிபந்தனையும் இல்லாமல் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரெடியாக இருப்பதாக புதின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிக்கத் தயாராக இருப்பதாக புதின் குறிப்பிட்டுள்ளார். புதினின் இந்த கருத்துக்கள் பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது. ஏனென்றால், இதுநாள் வரை உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தைக் கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவேன் என புதின் சொல்லி வந்தார். ஆனால், இப்போது திடீரென நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வருவதாக புதின் குறிப்பிட்டுள்ளார். இது போரை நிறுத்திவிடலாம் என்ற மனநிலைக்கு ரஷ்யா வந்துள்ளதையே காட்டுகிறது. அதேபோல உக்ரைன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் உடன் மட்டுமே எந்தவொரு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட முடியும் என்பதையும் புதின் தெளிவுபடுத்திவிட்டார். இதன் மூலம் உக்ரைன் அதிபரான இது ஜெலென்ஸ்கியின் பங்கு இதில் இல்லாமல் போகிறது. ஏனெனில் அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. ரஷ்யா அவரை அங்கீகரிக்க மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இப்போதுள்ள போர் சூழலில் தேர்தல் நடத்த முடியுமா என்பது தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கச் சிலர் தற்காலிக போர் நிறுத்தம் குறித்தும் பேசுகிறார்கள். இருப்பினும், இந்த யோசனையை புதின் திட்டவட்டமாக நிராகரித்து இருக்கிறார். குறுகிய போர் நிறுத்தம் எல்லாம் இதில் ஒர்க் அவுட் ஆகாது என்றும் நீண்ட கால போர் நிறுத்த உடன்படிக்கையே இதில் நமக்குத் தீர்வை தரும் என்பதையே வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷ்யா உக்ரைன் போர் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட ரஷ்யாவின் அணுசக்தி, பயாலஜிக்கல் மற்றும் கெமிக்கல் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். அவரது கட்டிடத்திற்கு வெளியே வாகனம் ஒன்று நிறுத்தப்பட்ட நிலையில், அது வெடித்ததில் அவர் உயிரிழந்தார். இதன் பின்னணியில் உக்ரைன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், உக்ரைன் இந்த தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இப்படி மாறி மாறி தாக்குதல் தீவிரமாக நடந்து வரும் நிலையில், திடீரென போர் நிறுத்தத்திற்கு புதின் ஓகே சொல்வது போல கருத்துச் சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Related Post