பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தையே அதிரச் செய்துள்ள பல்லடம் மூவர் கொலைச் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். தெய்வசிகாமணி, அலமேலு தம்பதி தென்னை விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில், உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்வதற்காக கோவையில் இருந்து செந்தில் குமார் அம்மா வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை வந்திருந்தார். மூவரும் இரவு உணவை சாப்பிட்டதும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது, நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரமாக நாய்கள் குரைத்துள்ளன. இதையடுத்து, தெய்வசிகாமணி எழுந்து வெளியே போய் பார்த்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை அரிவாளால் வெட்டினர்.
பின்னர், வீட்டிற்குள் சென்று அலமேலுவையும் செந்தில்குமாரையும் தலைப் பகுதியிலேயே வெட்டியுள்ளனர். இதையடுத்து, கொலைக் கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது. அடுத்த நாள் காலை 7 மணியளவில் சவரத் தொழிலாளி வல்பூரான் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது மூன்று பேரும் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். தெய்வசிகாமணி உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பல்லடம் பகுதி மக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெய்வசிகாமணியின் மருமகளைப் பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். நிறைய கேள்விகள், வலிகள் இருந்தாலும் கூட நாங்கள் எல்லோரும் தமிழக காவல் துறையினருடன் உள்ளோம். இந்த வழக்கை மிகத் தீவிரமாக போலீஸார் கையில் எடுத்துள்ளனர். 14க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளோம். காவல் துறை விரைந்து செயல்பட்டால் கூட, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு குழுவை அமைத்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளோம். அதேநேரத்தில், தமிழகத்தில் சிபிஐ அதிகாரிகள் வருவதற்கான அனுமதி இல்லை.
முதல்வர் ஸ்டாலினிடம் வைக்க கூடிய ஒரே வேண்டுகோள், இந்த கோரிக்கையை முதலமைச்சரும் செவிசாய்க்க வேண்டும். கொங்கு பகுதியில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதலும் முடிவுமாக இப்பிரச்சனை இருக்க வேண்டும். போதை கலசாரம், சமூக வலைதளங்களில் ஆபசமான பதிவுகள், வீடியோக்கள் போன்றவற்றை பார்த்து இன்றைய தலைமுறை பார்த்து வளர்கின்றனர்.
அரிவாள் கலசாரமே இல்லாத கொங்கு பகுதியில் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க கோரிக்கை வைக்க போகிறோம். எனவே, இதற்கு தமிழக அரசு இசைவு கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சிபிஐ விசாரணை கேட்டால் அதற்கு சில வாரங்கள் எடுக்கும்.
எனவே, முதலமைச்சரும் இந்த விஷயத்தை புரிந்துகொண்டு பல்லடம் மூவர் கொலைச் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். சில வழக்குகளுக்கு சிபிஐ அதிகாரிகளே சரியாக இருப்பார்கள் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage