அல்லு அர்ஜுன் வழக்கில் ட்விஸ்ட்.. புகாரை வாபஸ் வாங்க ரெடி.. நெரிசலில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கம்

post-img
ஹைதராபாத்: ஹைதராபாத் தியேட்டரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்தார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று கைது செய்த நிலையில் புகாரை வாபஸ் வாங்க தயாராக இருப்பதாக இறந்த பெண்ணின் கணவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாகவே இந்த திரைப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளில் சேர்த்து இந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை கடந்துள்ளது. இது அல்லு அர்ஜுன் மற்றும் அவரது ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. இதற்கிடையே தான் அல்லு அர்ஜுன் இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த 4ம் தேதி அதாவது 'புஷ்பா 2' திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இறந்த ரேவதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். மேலும் கூட்ட நெரிசல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தான் சிக்கடபள்ளி போலீசார் தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அதேபோல் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் அவர் 14 நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றே ஜாமீனில் வெளியே வர உள்ளார். இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் போலீசில் வழங்கிய புகாரை திரும்ப பெற தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதுபற்றி பாஸ்கர் கூறுகையில், ‛‛நாங்கள் தான் சந்தியா தியேட்டருக்கு சென்றோம். அன்றைய தினம் எனது மகன் தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டும் என்று கூறினார். இதனால் தான் நான், என் மனைவி மற்றும் மகன் ஆகியோர் தியேட்டருக்கு சென்றோம். இதில் அல்லு அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லை. அல்லு அர்ஜுன் கைது குறித்து போலீசார் எனக்கு எந்த தகவலையும் அளிக்கவில்லை. தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் என் மனைவி ரேவதி இறந்த சம்பவம் உள்ளிட்டவற்றுக்கும் அல்லு அர்ஜுனுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு எதிரான புகாரை திரும்ப பெற நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். ஒருவேளை பாஸ்கர் தனது புகாரை வாபஸ் வாங்கும் பட்சத்தில் அந்த வழக்கு முடித்து வைக்கப்படும். அப்படியானால் அல்லு அர்ஜுன் சிறையில் இருக்க வேண்டிய தேவையில்லை என்பதோடு அவருக்கு எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எந்த சிக்கலும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post